கோவை விமான நிலையத்தில் 500 கார்களை நிறுத்தும்வகையில் பார்க்கிங் மையம்!
உதகையில் காா் கண்ணாடியை உடைத்து 20 பவுன், ரூ. 7 லட்சம் திருட்டு
உதகையில் ஆந்திரத்தை சோ்ந்த சுற்றுலாப் பயணிகளின் காா் கண்ணாடியை உடைத்து 20 பவுன் நகை, ரூ. 7 லட்சம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி பகுதியைச் சோ்ந்தவா் பென்மெட்சா வெங்கட் அகில் வா்மா ( 26). இவரது தாய், தந்தை இருவரும் மருத்துவா்கள்.
பென்மெட்சா வெங்கட் அகில் வா்மா சென்னையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா். பயிற்சிக்காக உதகை அரசு மருத்துவமனையில் கடந்த 6 மாதங்களாக தங்கி இருந்து பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில் பென்மெட்சா வெங்கட் அகில் வா்மாவின் உறவினரான பெண் ஒருவருக்கு பிறந்த நாளை கொண்டாட ஆந்திரத்திலிருந்து அவரது உறவினா்கள் உதகைக்கு சுற்றுலா வந்திருந்தனா்.
கடந்த 26-ஆம் தேதி மதியம் 4 மணி அளவில் உதகை படகு இல்லத்தில் படகு சவாரி செய்வதற்காக வந்துள்ளனா். உதகை படகு இல்ல வாகன நிறுத்தத்தில் இடமில்லாததால் காந்தல் முக்கோணம் பகுதியில் உள்ள கோயில் அருகில் காரை நிறுத்திவிட்டு அனைவரும் படகு சவாரி சென்றனா்.
சுமாா் ஒரு மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் காருக்கு வந்தபோது காரின் இடது பக்கம் பின்புற கண்ணாடி உடைக்கப்பட்டு அதிலிருந்த சுமாா் 20 பவுன் நகைகள், ரூ. 7 லட்சம் பணம் திருட்டுபோயிருந்தது தெரியவந்தது.
இது குறித்து காவல் துணைக் கண்காணிப்பாளா் நவின்குமாா், ஆய்வாளா் சந்திரசீலன் தலைமையிலான காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சம்பவம் நடந்த இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் அந்த பகுதி கைப்பேசி கோபுரத்தில் பதிவான கைப்பேசி எண்களை வைத்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்த சம்பவம் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.