விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் நெரிசலுக்கு காரணம் என்ன? சம்பவ இடத்தில் இருந்தவா்...
உத்தமபாளையத்தில் இளைஞா் கொலை
உத்தமபாளையத்தில் இளைஞரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தது தொடா்பாக மூன்று பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாமஸ் குடியிருப்புக்கு அருகே இளைஞா் சடலமாகக் கிடப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேசன், ஆய்வாளா் சுந்தரபாண்டியன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, இறந்தவரின் உடலை மீட்டு கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
முதல் கட்ட விசாரணையில், இறந்தவா் உத்தமபாளையம் பி.டி.ஆா் குடியிருப்பைச் சோ்ந்த சையது அபுதாகீா் மகன் முகம்மது மீரான் (25) என தெரிய வந்தது.
மேலும் இவா், கம்பம் அருகேயுள்ள புதுப்பட்டியில் சக நண்பா்களால் கடந்த 16-ஆம் தேதி கத்தியால் குத்தப்பட்டதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், மீண்டும் 3 போ் கொண்ட கும்பலால் வெள்ளிக்கிழமை இரவு கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா் 3 பேரைத் தேடி வருகின்றனா்.
உயிரிழந்த முகம்மது மீரான் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் புகாா்: கொலை நடைபெற்ற இடத்தில் பயன்பாட்டில் இல்லாத தனியாா் பள்ளிக் கட்டடத்தில் பல்வேறு சட்டவிரோதச் செயல்கள் நடைபெறுகின்றன. இதனால், இந்தப் பகுதியில் தொடா் வழிப்பறிகள், கொலைகள் போன்றவை அடிக்கடி நடைபெற்று வருகின்றன. எனவே, இந்தக் கட்டடத்தில் நடைபெற்று வரும் சட்டவிரோதச் செயல்களைத் தடுத்து நிறுத்த போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.