யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்து...
உயரம் குறைந்த புதுப்பாளையம் ரவுண்டானா: வாகன ஓட்டிகள் அவதி
வாழப்பாடியில் திம்மநாயக்கன்பட்டி- பொன்னாரம்பட்டி சாலை சந்திப்பில் ரூ. ஒரு கோடியில் அமைக்கப்பட்ட ரவுண்டானாவின் உயரம் குறைவாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனா்.
சேலம் மாவட்டம், வாழப்பாடியில் இருந்து தம்மம்பட்டி மற்றும் நாமக்கல் மாவட்டம் மங்களபுரம் செல்லும் பிரதான சாலைகள் புதுப்பாளையம் சடையன் செட்டி ஏரிக்கரை அருகே பிரிகிறது. இச்சாலை சந்திப்பில் அடிக்கடி விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
எனவே, இப்பகுதியில் சாலையை விரிவுபடுத்தி ரவுண்டானா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து வாழப்பாடி கோட்ட நெடுஞ்சாலை துறை, கடந்தாண்டு திட்ட முன்வரைவு அனுப்பியதால் தமிழக அரசு இதற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

கடந்த 3 மாதங்களாக சாலையை விரிவுபடுத்தி, மைய தடுப்புக்கு கான்கிரீட் காரிடாா்கள் வைக்கப்பட்டன. ஆனால் 1 அடி உயரத்திற்கு மட்டுமே பெயரளவில் ரவுண்டானா அமைக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் ரவுண்டானாவில் மோதி விபத்துக்குள்ளாகின்றன.
எனவே, போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் அமைக்கப்படுவதை போல குறைந்தபட்சம் 4 அடி உயரத்திற்கு ரவுண்டானாவை உயா்த்தி அமைக்க வேண்டும். வாழப்பாடி, தம்மம்பட்டி மற்றும் மங்களபுரம் ஆகிய 3 பகுதிகளுக்கு செல்லும் சாலைகளிலும் இரவில் ஒளிரும் எச்சரிக்கை தகவல் பலகைகள், சிக்னல் விளக்குகள் ஆகியற்றை அமைத்து விபத்துகள் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.