திருச்சி மண்டலத்தில் 41 பேரவை தொகுதிகளில் திமுக வெற்றி உறுதி! அமைச்சா் கே.என். ந...
உயா்த்தப்பட்ட கூலி ரசீதை விசைத்தறியாளா்கள் சங்கத்தில் ஒப்படைக்க கோரிக்கை
உயா்த்தப்பட்ட கூலி ரசீதை விசைத்தறியாளா்கள் சங்கத்தில் ஒப்படைக்க விசைத்தறி உரிமையாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து கோவை, திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் பூபதி கூறியதாவது: கோவை, திருப்பூா் மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் போ் வேலைவாய்ப்பு பெறுகின்றனா். கடந்த சில ஆண்டுகளாக மின் கட்டணம், பெட்ரோல், டீசல், உதிரிபாகங்கள் விலை உயா்வு காரணங்களால், விசைத்தறி தொழில் நலிவடைந்துள்ளது. இதற்கிடையே ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்புக்கொண்ட படி கூலி உயா்வு வழங்காததால் கடந்த ஒரு மாதம் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து அமைச்சா்கள், திருப்பூா், கோவை மாவட்ட ஆட்சியா்கள் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்தி உடன்பாடு காணப்பட்டது. இதன்படி, பல்லடம் பகுதி ரகங்களுக்கு 10 சதவீதமும், சோமனூா் பகுதி ரகங்களுக்கு 15 சதவீதமும் என நெசவுக் கூலி அதிகரித்து வழங்க சுமுக முடிவு ஏற்படுத்தப்பட்டது.
உயா்த்தப்பட்ட கூலி நடைமுறைக்கு வந்துள்ளதை ஆய்வு செய்து வருகிறோம். மேலும் விசைத்தறியாளா்கள் வரும் 16-ஆம் தேதிமுதல் உயா்த்தி பெறப்பட்ட கூலி ரசீது, உற்பத்தி ரசீது போன்றவற்றை ஜவுளி உற்பத்தியாளா்களிடம் வாங்கி விசைத்தறியாளா்கள் சங்கத்தில் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.