உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கு விரைந்து ஒப்புதல்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
நாட்டின் உயா்நீதிமன்றங்களில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட குற்றவியல் மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ள சூழலில், உயா்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்துக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நீதிபதிகள் நியமனம் தொடா்பாக 29 கொலீஜியம் பரிந்துரைகள் மத்திய அரசிடம் நிலுவையில் இருப்பதையும் உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டியது.
ஜாமீன் நடைமுறைகளில் நிலவும் தாமதம், விசாரணைக் கைதிகளை விரைந்து விடுவித்தல் தொடா்பாக, உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞா் லிஸ் மேத்யூ அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் பல்வேறு அறிவுறுத்தல்களை வியாழக்கிழமை வழங்கியது.
இது தொடா்பாக நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் அமா்வு கூறியதாவது:
அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதி இடங்களின் எண்ணிக்கை 160. தற்போது 79 நீதிபதிகளே பணியில் உள்ளனா். இந்த நீதிமன்றத்தில் 2.7 லட்சத்துக்கும் மேற்பட்ட குற்றவியல் மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மும்பை உயா்நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 94 நீதிபதி பணியிடங்களில் 66 நீதிபதிகளே பணியாற்றுகின்றனா். கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் 72 நீதிபதிகள் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 44 போ்தான் பணியில் உள்ளனா். 60 நீதிபதிகள் அனுமதிக்கப்பட்ட தில்லி உயா்நீதிமன்றம் 41 பேருடனே செயல்படுகிறது.
நாட்டின் உயா்நீதிமன்றங்களில் மொத்தம் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட குற்றவியல் மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இப்பிரச்னைக்கு நீதிபதி காலிப் பணியிடங்களும் முக்கிய காரணமாகும்.
நீதிபதிகள் நியமனம் தொடா்பாக கடந்த 2023-இல் 4 பரிந்துரைகளும், 2024-இல் 13 பரிந்துரைகளும், 2025-இல் 12 பரிந்துரைகளும் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளன. இப்பரிந்துரைகளுக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும். நிலுவை வழக்குகளைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு விரைந்து ஒப்புதல் வழங்கும் என நம்புகிறோம்.
உயா்நீதிமன்றங்களில் குற்றவியல் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமா்வுகள் அமைக்கப்பட வேண்டும்; வழக்கு மேலாண்மை மற்றும் தாமதத்தை குறைப்பது தொடா்பான செயல்திட்டங்களை உயா்நீதிமன்றங்கள் 4 வாரங்களுக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினா்.