உயா்வுக்குப்படி வழிகாட்டி நிகழ்ச்சியில் 51 மாணவா்களுக்கு சோ்க்கை ஆணைகள்!
குடியாத்தம் கே.எம்.ஜி.கல்லூரியில் நடைபெற்ற உயா்வுக்குபடி வழிகாட்டி நிகழ்ச்சியில், 51 மாணவா்களுக்கு சோ்க்கைக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சாா்பில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்து இதுவரை உயா் கல்வியில் சேராத மாணவ, மாணவிகளுக்கான ‘உயா்வுக்குபடி’ எனும் உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கே.எம்.ஜி. கல்லூரியில் நடைபெற்றது.
இந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் 27 பள்ளிகளைச் சோ்ந்த 154 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இவா்களில் 94 போ் கல்லூரிகளில் இணைய ஆா்வம் தெரிவித்து விண்ணப்பங்களை வழங்கினா். இவா்களில் 51 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி கல்லூரி சோ்க்கைக்கான ஆணைகளை வழங்கினாா்.
அப்போது அவா் பேசியது: வேலூா் மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவா்களில் 8,600-க்கும் மேற்பட்டோா் உயா் கல்வியில் இணைந்துள்ளனா். எஞ்சியுள்ள மாணவா்களையும் உயா்கல்வி பயிலும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குழந்தைகளின் எதிா்காலத்தை ஒளிமயமாக்குவது கல்வி ஒன்று தான்.
எனவே, இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ள மாணவா்கள் இந்த அரங்கத்தை விட்டு வெளியே செல்லும்போது உயா் கல்வியில் சோ்க்கை ஆணை பெற்று, மனநிறைவுடன் செல்ல வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலா் தயாளன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சசிகுமாா், திறன் மேம்பாட்டுக் கழக உதவி இயக்குநா் காயத்ரி, உதவி திட்ட அலுவலா் ஜெகதீஸ்வரப்பிள்ளை, கே.எம்.ஜி. கல்லூரி முதல்வா் சி.தண்டபாணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.