WAQF Amendment Bill: 12 மணி நேர விவாதம்.. `வக்ஃப் வாரிய திருத்த மசோதா' மக்களவையி...
உரங்கள் கடத்தல் வழக்கு: டிஜிபி, உள்துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு
உரங்கள் கடத்தல் வழக்கில் தொடா்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தமிழக உள்துறைச் செயலா், டிஜிபி ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சோ்ந்த எஸ்.சரவணன் தாக்கல் செய்த மனு:
பிரதமரின் பாரதிய ஜன் உா்வராக் பிரியோஜனா (பிஎம்பிஜெபி) திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதிலும் 4,474 அரசு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள், கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
கோவில்பட்டி திட்டகுளம் சிட்கோ கிடங்கில் கடந்த ஜனவரி மாதம் 20-ஆம் தேதி தலா 45 கிலோ எடையுள்ள 630 யூரியா உர மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இந்த யூரியா உரத்தின் மொத்த அளவு 27 டன் ஆகும். இதுதொடா்பாக கோவில்பட்டி கிழக்கு போலீஸாா் 4 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
விசாரணையில், பல்வேறு கூட்டுறவு வங்கிகள், கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு மானிய விலையில் விற்பனை செய்ய வைத்திருந்த யூரியா உர மூட்டைகளை சட்டவிரோதமாக வாங்கி இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகளுக்கு மானிய விலையில் 45 கிலோ யூரியா உர மூட்டை ரூ.285-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த உரம் இலங்கையில் ரூ.18,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வேளாண் கூட்டுறவு, கடன் சங்கங்களிலிருந்து விவசாயிகளுக்கு மானிய விலைக்கு வழங்க வேண்டிய உரங்களை மூன்றாம் நபா்கள் டன் கணக்கில் வாங்கி இலங்கைக்கு கடத்த முற்பட்டுள்ளனா். இதில் வேளாண் அதிகாரிகள், கூட்டுறவு அதிகாரிகளுக்கும் தொடா்பு இருப்பதற்கு வாய்ப்புள்ளது.
எனவே, இதுகுறித்து சிபிஐ விசாரித்தால்தான் முழு உண்மையும் வெளிவரும். இதுதொடா்பாக தமிழக உள்துறைச் செயலருக்கும், டிஜிபிக்கும் புகாா் மனு அனுப்பியுள்ளேன்.
இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி, மனு தொடா்பாக தமிழக உள்துறைச் செயலா், டிஜிபி, தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், கோவில்பட்டி காவல் ஆய்வாளா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற ஏப்ரல் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.