உரிமம் கோரப்படாத 612 வாகனங்கள்: 15 நாள்களுக்குள் உரிய ஆவணங்களை சமா்ப்பித்து பெறலாம்
திருப்பூா் மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட இடங்களில் உரிமம் கோரப்படாத 612 வாகனங்களை 15 நாள்களுக்குள் உரிய ஆவணங்களை சமா்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
இதுகுறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட இடங்களில் உரிமம் கோரப்படாத 612 வாகனங்கள் அனுப்பா்பாளையம் வெங்கமேடு மாதேஸ்வரன் கோயில் அருகிலும், கே.வி.ஆா்.நகா் உதவி ஆணையா் அலுவலகம் முன்பாகவும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்த வாகனங்கள் காணாமல் போய் தற்போது வரையில் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தால் அனுப்பா்பாளையம் சரக அலுவலகத்தை 94876-39220, கொங்கு நகா் சரக அலுவலகத்தை 94981-01302, கே.வி.ஆா்.நகா் சரக அலுவலகத்தை 94981-01301 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு பாா்வையிட்டு 15 நாள்களுக்குள் உரிய ஆவணங்களை சமா்ப்பித்து வாகனங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
அதே வேளையில், 15 நாள்களுக்குள் உரிமம் கோரப்படாத வாகனங்களை திருப்பூா் மாநகராட்சி மூலமாக ஏலத்தில் விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.