உள்ளாட்சியில் ஊழல்; திமுகவினரைக் காப்பாற்ற ஸ்டாலின் முயற்சி! - இபிஎஸ் குற்றச்சாட்டு
மதுரை மாநகராட்சியில் சொத்து வரி விதிப்பதில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"எங்கு நீதி மறைந்து நிழல் ஆட்சி செய்யுமோ, அங்கு நல்லாட்சி என்பது வெறும் வாக்குறுதியே! - என்ற தத்துவம் தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளின் தற்போதைய நிலையை துல்லியமாக வெளிப்படுத்துகிறது.
'உள்ளாட்சியில் நல்லாட்சி' என்று விளம்பரப்படுத்தப்பட்ட உள்ளாட்சி மன்றங்கள், குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கத்தால் சீரழிந்து மக்களின் நம்பிக்கையை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளன.
ஆட்சிக்கு வந்தவுடன் இரண்டு மடங்கு சொத்துவரி உயர்வுடன் ஆண்டுதோறும் 6 சதவீத சொத்துவரி உயர்வு, பலமடங்கு குடிநீர் கட்டணம், கழிவுநீர் கட்டணம், தொழில்வரி உயர்வுடன் குப்பை வரியையும் பலமடங்கு உயர்த்தி உள்ளாட்சியின் நிதி நிலைமையை உயர்த்திய நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் மாடல் அரசு, வாங்கக்கூடிய வரிகளுக்கு ஏற்ப சாலை வசதியையோ, குடிநீர் வசதியையோ தெரு விளக்கு வசதி உள்ளிட்ட மக்களின் அடிப்படை வசதிகள் எதையும் மேம்படுத்தவில்லை.
சில நாட்களுக்கு முன்பு மதுரை மாநகராட்சியில், சொத்து வரி விதிப்பதில் மிகப் பெரிய ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் முன்னாள் உதவி கமிஷனர், மண்டலத் தலைவரின் உதவியாளர் உள்பட 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மண்டலத் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் கூறியதன் அடிப்படையில்தான் நாங்கள் சொத்து வரியைக் குறைத்தோம் என்று வாக்குமூலம் அளித்துள்ளனர்.
எப்போதும் குற்றம் செய்தவர்களைக் காப்பாற்ற முயலும் ஸ்டாலின், குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட திமுக மண்டலக் குழுத் தலைவர்களையாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர்களை ராஜிநாமா செய்ய உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவர்களும் ராஜிநாமா செய்துள்ளனர்.
மதுரை மாநகராட்சி தவிர, ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் கோவை, திருநெல்வேலி ஆகிய மாநகராட்சிகளின் மேயர்களும் ஏற்கெனவே ராஜிநாமா செய்துள்ளனர்.
மேலும், விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்ததாக சர்க்காரியா கமிஷனாலேயே குறிப்பிடப்பட்ட திமுக-வினர் வசம் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், திமுக மேயர் மற்றும் தலைவர்களாக உள்ளவர்களை எதிர்த்துஎதிர்க்கட்சியினர் மற்றும் மக்கள் கூறும் ஊழல் குற்றச்சாட்டுகளோடு திமுக-வின் கவுன்சிலர்கள் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளின் கவுன்சிலர்களே ஊழல் குற்றச்சாட்டுகள் கூறுவதும், உள்ளிருப்புப் போராட்டங்களை நடத்துவதும் என்று ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இதற்குக் காரணம், உள்ளாட்சி பதவிகள் குடும்ப உறுப்பினர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, 'கமிஷன்', 'கலக்ஷன்', 'கரப்ஷன்' தங்கு தடையின்றி நடப்பதுதான்.
உள்ளாட்சி மன்றங்கள் மக்கள் நலனுக்காக அமைக்கப்பட்டவை என்றாலும், இவை உடன்பிறப்புகளின் குடும்ப ஆதிக்கத்திற்காக உருவாக்கப்பட்டவையோ' என்ற சந்தேகம் எழுகிறது. இத்தகைய ஊழல்கள் மீண்டும் மீண்டும் எழுவது மக்களை ஏமாற்றுவதாகவே உள்ளது. இந்நிலையில், விடியா திமுக ஆட்சியின் முதலமைச்சர் ஸ்டாலின், அடிக்கடி பொதுவெளியில் பேசி வரும் 'உள்ளாட்சிகளில் நல்லாட்சி' என்பது வெறும் வெற்று விளம்பரமாகவே, வாய்வீச்சாகவே தமிழக மக்கள் பார்க்கிறார்கள்.
தமிழக மக்கள் 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஏன் இவர்களை தேர்ந்தெடுத்தோம் என்று தமிழக மக்கள் தங்களைத் தாங்களே நொந்து கொண்டிருக்கின்றனர். தமிழக நலனை கவனிக்காமல், குடும்ப நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் விடியா திமுக ஸ்டாலின் அரசு ஜனநாயகத்திற்கு எதிரானது. உள்ளாட்சி மன்றங்கள் மக்களின் வளர்ச்சிக்கு உருவாக்கப்பட்டவை, குடும்ப ஆதிக்கத்திற்கு அல்ல என்பதை தமிழக மக்கள் வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலினுக்கு உணர்த்தத் தயாராகிவிட்டார்கள் என்பதை, நான் செல்லும் இடங்களில் எல்லாம் கூடும் மக்கள் கூட்டம் எடுத்துரைக்கிறது. மேலும், 2026ல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமையும்போது, தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.