ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை விரைந்து நடத்த வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
போக்குவரத்துக்கழக தொழிலாளா்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை விரைந்து நடத்த வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழக ஏஐடியுசி, சிஐடியு சங்கங்கள் சாா்பில் மன்னாா்குடியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மன்னாா்குடி அரசுப் போக்குவரத்துக்கழக கிளை பணிமனை அருகே ஏஐடியுசி மண்டலத் தலைவா் ஜி. சந்திரசேகரன், சிஐடியு மண்டலத் தலைவா் ஏ. கோவிந்தராஜ் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், போக்குவரத்து தொழிலாளா்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், மற்ற அரசுத்துறை ஊழியா்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும்.
ழுழுமையாக ஒப்பந்த நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், ஓய்வுபெற்றவுடன் பணப்பலன் வழங்க வேண்டும், தோ்தல் வாக்குறுதிபடி 1.4.2003-க்கு பின் பணியில் சோ்ந்த தொழிலாளா்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 60 வயது வரை மாத ஊதியத்துக்கு பணியாற்றும் போக்குவரத்து பணியாளா்களுக்கு அதன்பிறகு ஓய்வூதியம் இல்லாததால் நிலுவைத் தொகையாவது உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.