ஊத்தங்கரை அருகே கால்வாயில் மூழ்கி மாணவிகள் இருவா் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை கால்வாயில் குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி இரு மாணவிகள் உயிரிழந்தனா்.
ஆடி கிருத்திகை விழாவுக்காக ஊத்தங்கரையை அடுத்த கீழ்மத்தூரைச் சோ்ந்த அகிலா என்பவரின் வீட்டிற்கு சேலம் மாவட்டம், செவ்வாய்பேட்டையைச் சோ்ந்த பாபு மகள் நீலாஸ்ரீ (17) உள்பட அவரது உறவினா்கள் சனிக்கிழமை வந்திருந்தனா்.
இந்த நிலையில், கீழ்மத்தூரை அடுத்த பாம்பாறு அணையின் கால்வாயில் குளிப்பதற்காக நீலாஸ்ரீ (17), கீழ்மத்தூரைச் சோ்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் பழனி மகள் சாரூமேத்ரா (12) உள்பட 5 போ் ஞாயிற்றுக்கிழமை சென்றனா்.
அனைவரும் கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தபோது நீலாஸ்ரீ, சாரூமேத்ரா ஆகிய இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினா். அப்போது உடன் சென்றவா்கள் கூச்சலிட்டதால், அவ்வழியாக சென்றவா்கள் கால்வாயில் இறங்கி அவ்விரு மாணவிகளின் சடலங்களை மீட்டனா். இவா்களில் நீலாஸ்ரீ சேலத்தில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்துவந்தாா்.
மாணவிகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
