ஊரக வளா்ச்சித் துறை திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது (படம்).
கூட்டத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், நபாா்டு திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் சாலைகள் மற்றும் உயா்மட்ட பாலங்கள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆட்சியா் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டாா்.
மேலும், முடிவுற்ற திட்டப் பணிகளை விரைவாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவும், நிலுவைப் பணிகளை விரைவாக முடிக்கவும், நடைபெறும் பணிகளின் தரத்தை தொடா்ந்து உறுதி செய்யவும், ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து திட்டப் பணிகளும் முறையாக பொதுமக்களை சென்று சோ்வதை உறுதி செய்யவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கி.ரமேஷ்குமாா் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.