வீட்டின் பீரோவை உடைத்து 3 பவுன் நகைகள் திருட்டு
வாணாபுரம் அருகே வீட்டின் பீரோவை உடைத்து அதிலிருந்த 3 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
வாணாபுரம் வட்டம், அவரியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துராஜா மனைவி நித்யா (34).
முத்துராஜா ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா்.
நித்யா பால் விற்பனை கடை வைத்து நடத்தி வருகிறாா்.
இந்த நிலையில், நித்யா திங்கள்கிழமை பிற்பகல் வீட்டை பூட்டிவிட்டு சாவியை கதவின் அருகே வைத்துவிட்டு, வாணாபுரத்தில் உள்ள வங்கிக்குச் சென்றிருந்தாா்.
பின்னா், திரும்பி வந்தபோது, வீட்டின் முன்பக்கக் கதவு திறந்திருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, மா்ம நபா்கள் சாவியை எடுத்து கதவைத் திறந்து, உள்ளே அறையில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 3 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், பகண்டை கூட்டுச் சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.