ஊரக வளா்ச்சித் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
ஊரக வளா்ச்சித் துறையிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கம் (ஏஐடியுசி) சாா்பில், திண்டுக்கல் மாவட்ட பொது மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கத்தின் நிா்வாகி ஆா்.ஈஸ்வரி தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் மு.ராமநிதி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.
இந்த மாநாட்டின்போது, ஊரக வளா்ச்சித் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கரோனா தீநுண்மி தொற்று பரவலின் போது பணிபுரிந்த முன் களப் பணியாளா்களுக்கு ரூ.15ஆயிரம் ஊக்கத் தொகையை வழங்க வேண்டும்.
உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி, அனைத்துத் திட்ட கணினி இயக்குபவா்களுக்கும், இளநிலை உதவியாளா்களுக்கு இணையாகவும், வட்டார ஒருங்கிணைப்பாளா்களுக்கு மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு இணையாகவும், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்களுக்கு உதவி இயக்குநா்களுக்கு இணையாகவும் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.