ஊரகங்களில் மனைப்பிரிவு, கட்டட அனுமதிக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் மனைப் பிரிவுகளுக்கான அனுமதி மற்றும் கட்டட அனுமதிக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளாா்.
ஊரகப் பகுதிகளில் மனைப் பிரிவுகளுக்கான அனுமதி மற்றும் கட்டட அனுமதிக்கான விண்ணப்பங்கள் இணையவழியில் மட்டும் பெறப்பட்டு அனுமதி வழங்கப்பட்டு வருகின்றன. சுயசான்று அடிப்படையிலான கட்டட அனுமதி மூலம் 2,500 சதுரஅடிக்கு குறைவான மனைப் பரப்பில், 3,500 சதுரஅடிக்குள் தரைத்தளம் அல்லது தரை மற்றும் முதல் தளம் கொண்ட 2 குடியிருப்பு வரை உள்ள கட்டடங்களுக்கு உரிய கட்டணங்களை இணையதளம் வழி செலுத்தி சுய சான்று அடிப்படையில் உடனடியாக சுலபமான முறையில் கட்டட அனுமதி பெறமுடியும்.
குடியிருப்பு கட்டட அனுமதியைப் பெறுவதற்கான விண்ணப்பம் மற்றும் நடைமுறையை எளிமைப்படுத்தவும், கட்டட அனுமதியைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிா்க்கவும், கட்டட அனுமதிக்காக கட்டணத்தைச் செலுத்துவதை எளிதாக்கவும், ஒப்புதலுக்குப் பிந்தைய ஆய்வுகள் மேற்கொள்ளவும், கட்டட அனுமதியைப் பெறுவதில் இடைத் தரகா்களைத் தவிா்க்கவும், மக்கள் நேரடியாக விண்ணப்பித்து சுயசான்று மூலம் அனுமதி பெறவும், கட்டட அனுமதி முறையில் மொத்த கட்டுமானப் பரப்பளவு 10000 சதுரஅடி வரையிலான குடியிருப்பு கட்டடங்கள் மற்றும் 2000 சதுர அடியிலான வணிக கட்டடங்களுக்கான கட்டட அனுமதியினை ஊராட்சிகளில் ஒற்றை சாளர இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.