செய்திகள் :

`எங்கள் மண்ணையும் நீரையும் மாசுபடுத்துவது நியாயமா?' - சுத்திகரிப்பு ஆலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு!

post image

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா இருக்கூர் , மாணிக்கநத்தம், வீரணம்பாளையம் பகுதிகளில் வாழும் மக்கள் விவசாயத்தையே முற்றிலும் நம்பி தங்களது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இங்கு கிட்டத்தட்ட 2,000 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் உள்ளது. அதில் கரும்பு, குச்சிக்கிழங்கு, காய்கறிகள் என விவசாயம் செய்து கொண்டிருக்கின்றனர். விவசாயம் மட்டுமல்லாமல் கால்நடைகளை வளர்த்தும் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொண்டிருக்கின்றனர். விவசாயத்திற்கு நீர் பாசனம், காவிரி ஆற்று நீர், ராஜவாய்க்கால் நீர், ஆழ்துளை கிணற்று நீர் என இவ்வாறு பல பாசன வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர் .

இந்த நிலையில் மத்திய அரசு இருக்கூர் காமராஜ் நகரில் அமைந்திருக்கும் காலாவதியான கல்குவாரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

அதாவது, காலாவதியான கல்குவாரி நீர்நிலையில் பரமத்தி மற்றும் பரமத்தி வேலூர் டவுன் பஞ்சாயத்து கழிவு நீரை குழாய்கள் மூலம் கொண்டு வந்து, இங்கே நிரப்பி சுத்திகரிப்பு செய்து விவசாயத்திற்கும் குடிநீராகவும் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தை அமைக்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா ஆணையிட்டுள்ளார். கடந்த மாதம் மக்கள் இத்திட்டம் தங்களுக்கு வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இதற்கான உரிய நடவடிக்கை எடுக்காமல் திட்டத்திற்கான வேலை நடைபெறுவதால், மக்கள் மாவட்ட ஆட்சியரை எதிர்த்து நேற்று டிசம்பர் 30 அன்று அறவழி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர் . இப்போராட்டம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இப்போராட்டத்தில் சுற்றி இருக்கும் அனைத்து ஊர் மக்களும் கலந்துகொண்டு திட்டத்திற்கான தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

போராட்டக் களத்தில் இருந்த மக்களிடம் பேசினோம். ``எங்களுக்கு போதுமான நீர் ஏற்கெனவே இருக்கிறது. கல்குவாரி நீர் எங்களின் நிலத்தடி நீர்மட்டத்தை குறையவிடாமல் பார்த்துக் கொள்கிறது. ராஜவாய்க்காலில் இருந்து வரும் வாய்க்கால் பாசன நீர் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்நிலையில் அரசாங்கம் நீர்நிலைகளில் கழிவு நீரை கலந்தால் எங்களின் நீர் மாசுபடும். அதனால் விவசாயம் செழிப்பில்லாமல் எங்களின் வாழ்வாதாரம் அழிந்து போகும். அதுமட்டுமன்றி நாங்கள் அரசாங்கம் இதற்கு முன் வேறு ஊர்களில் அமைத்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களைப் பார்வையிட்டோம்.

அங்கிருக்கும் மக்களிடமும் பேசினோம். வேறு ஊர்களில் அமைக்கப்பட்ட நிலையங்கள் சரியான பராமரிப்பு இல்லாமல் இருப்பதாகவும், சுற்றி இருக்கும் பகுதிகள் மிகவும் மாசடைந்து விட்டதாகவும், சுத்திகரிக்கப்பட்டு வரும் நீரானது மிகவும் கலங்கலாக மோசமான நிலையில் எதற்கும் பயன்படுத்த முடியாமல் இருப்பதாகவும் அந்த ஊர் மக்கள் கூறியுள்ளனர். அது மட்டுமன்றி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவிருக்கும் இடத்தின் அருகில் பால் குளிரூட்டும் நிலையம் இருக்கிறது, அதுவும் இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படும். அரசு அதிகாரிகள் இங்கு குடிநீர் திட்டம் வருவதாகக் கூறி எங்களை ஏமாற்றி, இத்திட்டத்தை அமைக்க கையெழுத்து வாங்கிச் சென்றனர்.

கல்குவாரியில் நீர் தேக்கி விவசாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது விதியாகும். அங்கு எவ்வாறு இத்திட்டத்தை அமைக்கலாம்... சுற்றி ஆயிரக்கணக்கில் விளை நிலங்களும் குடியிருப்புகளும் இருக்கும் இந்த இடத்தில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது எந்த வகையில் நியாயம்?

இத்திட்டத்தை வேறு ஏதாவது தரிசு நிலங்களில் மாற்றி அமைக்கலாம்... ஏன் விவசாய நிலங்கள் இருக்கும் இடங்களில் அமைக்க வேண்டும்? பரமத்தி மற்றும் ப.வேலூர் நகராட்சியில் தேங்கும் கழிவு நீரை அங்கேயே சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்திகரிக்கலாமே... ஏன் அங்கிருந்து குழாய்கள் மூலம் கொண்டு வந்து இங்கு விவசாய நிலம் இருககும் இடத்தில் சுத்திகரிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் கேள்வி! காலம் காலமாக விவசாயத்தை நம்பியே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்... எங்கள் மண்ணிலும், உணவிலும், உயிரிலும் கழிவுகளைக் கலந்து விடாதீர்கள் என்றுதான் போராடுகிறோம்.

அரசு எங்களின் நியாயமான கோரிக்கையைப் பரிசீலித்து, இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும். இல்லையென்றால், மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை அரசு நிர்வாகம் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்" என்றனர் குமுறலாக.

இது குறித்து அரசு அதிகாரிகளிடம் பேசியபோது, ``இக்காலகட்டத்தில் வீடுகளும், மக்கள் தொகையும் அதிகரித்து வருகின்றது. அதனால் கழிவுநீரும் அதிகரித்து வருகிறது. அது அப்படியே நீரில் கலக்காமல் அதைக் கொண்டு வந்து சுத்திகரிப்பு செய்து கழிவுகளை மட்டும் அகற்றலாம்.

மக்களின்  வாழ்வாதாரத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாத வகையில்தான் திட்டமிடப்பட்டுள்ளது. புவியீர்ப்பு முறையை பயன்படுத்தி கழிவுகளைச் சுத்திகரிக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. அரசு அமைக்கும் அனைத்து திட்டங்களும் மக்களின் நலனுக்காகவே; அதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்றனர்.

போராட்டத்திற்கு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ சேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தணியரசு உள்ளிட்டோர் வருகை தந்து மக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். மக்களின் கருத்தை அரசு ஏற்றுக்கொண்டு அதற்கான நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் என்றும் கூறினர்.

திருப்பத்தூர்: குவியும் குப்பையால் முகம் சுளிக்கும் வாகன ஓட்டிகள்... தி.மலை நெடுஞ்சாலை அவலம்!

திருப்பத்தூர் மாவட்டம், வெங்கலாபுரம் அருகே உள்ள திருவண்ணாமலை நெடுஞ்சாலையையொட்டி அமைந்திருக்கிறது இந்த இடம். செங்கம், சிங்காரப்பேட்டை, திருவண்ணாமலை செல்வதற்காக இந்த வழியை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருக... மேலும் பார்க்க

காட்பாடி: அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு - சிக்கலில் மகன் கதிர் ஆனந்த்?

வேலூர், காட்பாடி காந்தி நகரில் உள்ள தி.மு.க பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று காலையில் இருந்து அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.இதே வீட்டில்த... மேலும் பார்க்க

``படத்தை வைத்து திமுக நிர்வாகி என்று சொல்ல முடியாது; சிபிஐ விசாரணை தேவையற்றது'' -அமைச்சர் முத்துசாமி

ஈரோட்டில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், "அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்... மேலும் பார்க்க

Bhopal: `போபாலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு...' - 337 மெட்ரிக் டன் நச்சுக்கழிவுகளை அகற்றும் ம.பி அரசு!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபாலில் யூனியன் கார்பைட்' பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலை இருந்தது. 1984-ம் ஆண்டு அங்கிருந்து கசிந்த விஷ வாயுவால் 5,479 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 5 லட்சத்துக்கும் அதி... மேலும் பார்க்க

பழனி: பூட்டி கிடக்கும் தாய்மார்கள் பாலூட்டும் அறை; அவதிக்குள்ளாகும் மகளிர்- நடவடிக்கை எடுக்கப்படுமா?

பழனி வ.உ.சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையானது பூட்டிய நிலையில் காணப்படுகின்றது. பெண்கள் பணி நிமித்தமாகவும் பயணங்கள் மேற்கொள்ளும் போதும் பேருந்து நிலையத்தில் காத்திருக்கு... மேலும் பார்க்க

Tirupati: ``திருப்பதி தேவஸ்தானத்தில் கோடி கணக்கில் மோசடி!'' - மீண்டும் எழுந்த புகாரால் அதிர்ச்சி

திருப்பதி தேவஸ்தானத்தில் தொலைந்த பொருள்களை சேமித்து வைக்கும் கவுண்டர்களில் ஏகப்பட்ட மோசடிகள் நடப்பதாக திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் மற்றும் பாஜக பிரமுகர் G.பானு பிரகாஷ் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். ... மேலும் பார்க்க