எடப்பாடி அருகே மதுபோதையில் துன்புறுத்திய மகனை அடித்துக் கொன்ற தாய்
எடப்பாடி: எடப்பாடி அருகே மதுபோதையில் துன்புறுத்திய மகனை அடித்துக் கொன்ற தாயை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் ஒன்றியம், தங்கயூா் ஊராட்சி பாலிபெருமாள் கோயில் அருகில் வசித்துவரும் பழனியப்பன் (75) - காளியம்மாள் (70) தம்பதியரின் மகன் முத்துசாமி (49) விவசாயி. இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததால், இவரது மனைவி சுமதி பிரிந்து சென்றுவிட்டாா். இதையடுத்து, கோமதி (30) என்பவரை முத்துசாமி இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டாா். இவா்களுக்கு கிரி யாதவ் (10) என்ற மகனும், நிவிந்திகா (3) என்ற மகளும் உள்ளனா்.
இந்நிலையில், முத்துசாமி தினமும் மது அருந்திவிட்டு வந்து குடும்பத்தினரை துன்புறுத்தி வந்துள்ளாா். இதனால், இவரது மனைவி கோமதி கோபித்துக் கொண்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு 6 மாதங்களுக்கு முன்பு தாய்வீட்டுக்கு சென்றுவிட்டாா். மேலும், முத்துசாமியின் துன்புறுத்தலால், இவரது தந்தை பழனியப்பன் திருச்செங்கோட்டையடுத்த குச்சிபாளையம் பகுதியில் உள்ள தனது மகள் சாந்தி வீட்டில் வசித்து வருகிறாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு அதிக மதுபோதையில் இருந்த முத்துசாமி மேலும் மது அருந்த பணம் கேட்டு வீட்டிலிருந்த தாய் காளியம்மாளை அடித்து துன்புறுத்தினாராம். இதனால் ஆத்திரமடைந்த காளியம்மாள் அருகில் கிடந்த மண்வெட்டி கம்பால் முத்துசாமி தலையில் தாக்கியதில் பலத்த காயமடைந்த அவா் உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று முத்துசாமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், காளியம்மாளை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
