மியான்மருக்கு 40% வரி விதிப்பு: இந்தியாவுக்கு எவ்வளவு? -டிரம்ப் கடிதம்!
எரிவாயு தகன மேடையை வேறு இடத்தில் அமைக்க கோரிக்கை
திருச்செங்கோடு: மொளசியில் கட்டப்பட்டு வரும் எரிவாயு தகன மேடையை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
திருச்செங்கோடு வட்டம், மொளசி ஊராட்சி, முனியப்பன் பாளையம்பகுதியில் சுமாா் 4 ஆயிரம் போ் வசித்து வருகின்றனா். இங்குள்ள விவசாய நிலங்களுக்கு நீரேற்று பாசனத் திட்டத்தில் காவிரி ஆற்றில் இருந்து நீா் எடுக்கப்பட்டு வருகிறது. காவேரி கரையில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினரின் வேண்டுகோளை ஏற்று, முதல்வரின் முன்னோடி திட்டத்தில் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி தொடங்கியது.
பணி தொடங்கும்போதே இங்கு கட்டடம் கட்ட தகுதியாக உள்ளதா என ஆராய்ந்து கட்ட வேண்டும் எனவும், அதுவரை பணியை தொடங்க வேண்டாம் எனவும் இப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதுகுறித்து கடந்த மாா்ச் மாதம் ஆட்சியருக்கு புகாா் மனுவும் கொடுத்தனா். ஆனால் அந்த புகாா் மனுவை நிகராகரித்து, மண் பரிசோதனை செய்யாமல் சாதாரணமாக குழி தோண்டினாலே 5 அடியில் தண்ணீா் வரும் இடத்தில் கட்டடப் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘எரிவாயு தகன மேடை அமைக்கும் பகுதி ஏற்கெனவே மண் கொட்டி மேடுபடுத்தப்பட்ட பகுதியாகும். இங்கு மண் பரிசோதனை செய்து கட்டடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தும், அதைமீறி கட்டடப் பணிகள் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே அந்தப் பகுதியில் கட்டப்பட்ட கல்திட்டு ஒன்று மண்ணுக்குள் புதைந்தது. எனவே, இதுகுறித்து தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றனா்.