எலான் மஸ்க் பெயரில் போலி இணையதள பக்கங்கள்: காவல் துறை எச்சரிக்கை
டெஸ்லா’ நிறுவன உரிமையாளா் எலான் மஸ்க் ‘கிரிப்டோ கரன்சி’ முதலீடுகளை ஆதரிப்பதாக போலியான காணொலிகள் சமூக வலைதளங்களில் பரவி வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக ‘சைபா் கிரைம்’ காவல்பிரிவு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
டெஸ்லா உரிமையாளரும், உலகின் முன்னணி பணக்காரருமான எலான் மஸ்க், ‘கிரிப்டோ கரன்சி’ முதலீடுகளை ஆதரிப்பது போன்ற போலியான விளம்பர காணொலிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. எலான் மஸ்க், அவரது தந்தை எரோல் மஸ்க் ஆகியோரின் பேட்டிகளை செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மற்றும் பிற தொழில்நுட்பங்கங்கள் மூலம் தவறாக சித்தரித்து காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக மேற்கொண்ட விசாரணையில் இதுவரை 26 போலி ‘இன்ஸ்டாகிராம்’ கணக்குகளும், 14 போலி இணையதள பக்கங்களும் கண்டறியப்பட்டு, அவற்றை முடக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, எலான் மஸ்க் எந்தவொரு ‘கிரிப்டோ கரன்சி’ செயலி அல்லது இணையதளத்தையும் ஆதரிக்கவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும். எனவே, போலி இணையதள தகவலை நம்பி, செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.