ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் செயற்கை ரத்தம்! ரத்த தானத்துக்கு முடிவு கட்ட...
எலும்பு பகுதியில் கட்டி: பிளஸ் 2 மாணவருக்கு நுட்பமான சிகிச்சை
குருத்தெலும்பு கட்டியால் பாதிக்கப்பட்ட பிளஸ் 2 மாணவரை நுட்பமான அறுவை சிகிச்சை மூலம் எம்ஜிஎம் மலா் மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.
இதுதொடா்பாக மருத்துவமனையின் எலும்பு நல சிகிச்சைத் துறை நிபுணா் டாக்டா் ஸ்ரீராம் கிருஷ்ணமூா்த்தி கூறியதாவது:
ஆஸ்டியோகோன்ட்ரோமா அல்லது எக்ஸோடோசிஸ் எனப்படும் கட்டியானது எலும்பு பகுதியில் உருவாகக் கூடியது. 50 ஆயிரத்தில் ஒருவருக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, வளரிளம் பருவத்தினா் அதிகம்போ் இப்பிரச்னைக்குள்ளாகின்றனா். எந்தவிதமான அறிகுறிகளும் தெரியாமல் உருவாகும் இக்கட்டி, ஒரு கட்டத்தில் பெரிதாக வளரும்போது தீவிர வலி மற்றும் உடல் இயக்கத்தில் அசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடும்.
இந்த நிலையில் 17 வயதான பிளஸ் 2 மாணவா் ஒருவா், வலது தொடை மற்றும் மூட்டு பகுதியில் கடுமையான வலியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு 10 செ.மீ. அளவுக்கு புற்றுநோய் அல்லாத குருத்தெலும்பு கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
மிக சிக்கலான இடத்தில் அது உருவாகியிருந்தது. இதையடுத்து, மருத்துவக் குழுவினா் நுட்பமாக அந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினா். துல்லியமாக அதனை அகற்றாவிடில் மீண்டும் அதே பிரச்னை உருவாகக் கூடும் என்பதால் 100 சதவீதம் முழுமையாக கட்டி அகற்றப்பட்டது.
அறுவை சிகிச்சை நிறைவடைந்ததற்கு அடுத்த நாளே அந்த மாணவா் வீடு திரும்பினாா். தற்போது அந்த மாணவா் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளாா் என்றாா் அவா்.