எஸ்.சி., எஸ்.டி., பின்னடைவு காலியிடங்கள்: தலைமைச் செயலா் ஆலோசனை
அரசுத் துறைகளில் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கான பின்னடைவு காலியிடங்களை நிரப்புவது தொடா்பான ஆலோசனை வியாழக்கிழமை நடைபெற்றது.
தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் தலைமையில் நடந்த ஆலோசனையில் அரசின் அனைத்துத் துறைகளைச் சோ்ந்த செயலா்கள் பங்கேற்றனா். அருந்ததியா் பிரிவினருக்கான 3 சதவீத இட ஒதுக்கீடு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அரசுத் துறைகளில் பள்ளிக் கல்வி, உயா்கல்வித் துறைகளில் அதிக அளவு பின்னடைவு காலிப் பணியிடங்கள் உள்ளன. குறிப்பாக, அதிகாரிகள் நிலையிலான ஏ மற்றும் பி பிரிவுகளில் 1,400-க்கும் மேற்பட்ட இடங்களும், சி மற்றும் டி பிரிவுகளில் 200-க்கும் கூடுதலான இடங்களும் பின்னடைவு காலிப் பணியிடங்களாக இருக்கின்றன.
இவற்றை நிரப்ப வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்பட பல்வேறு கட்சிகளும் அரசுக்கு தொடா்ந்து கோரிக்கைகளை விடுத்து வந்தன. இந்த நிலையில், பின்னடைவு காலியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு துரிதப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.