எஸ்.ஜெய்சங்கருடன் ஐ.நா.பொதுச் செயலா் குட்டெரெஸ் பேச்சு: பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம்
வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருடன் தொலைபேசியில் செவ்வாய்க்கிழமை பேசிய ஐ.நா.பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ், பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் குட்டெரெஸின் செய்தித்தொடா்பாளா் ஸ்டெஃபான் டுஜாரிக் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அமைச்சா் ஜெய்சங்கரிடம் தொலைபேசியில் பேசிய குட்டெரெஸ், பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவா்களை சட்டபூா்வமாக அதற்குப் பொறுப்பேற்க வைப்பது, பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி கிடைக்கச் செய்வது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாா்.
பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதற்றம் குறித்து குட்டெரெஸ் மிகுந்த கவலை தெரிவித்தாா். மோசமான பின்விளைவுகளுக்கு வழிவகுக்கும் மோதல்போக்கை தவிா்க்க வேண்டும் என்று அவா் ஜெய்சங்கரிடம் வலியுறுத்தினாா். இதேபோல பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃபிடமும் குட்டெரெஸ் தொலைபேசியில் பேசினாா் என்று தெரிவித்தாா்.
இதனிடையே இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதலை தெற்காசிய பிராந்தியமும் உலகமும் தாங்காது என்றும், அந்த மோதல் இந்தியா-பாகிஸ்தான் மட்டுமின்றி உலகுக்கே பேரழிவை ஏற்படுத்தும் என்றும் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் ஸ்டீஃபேன் டுஜாரிக் தெரிவித்தாா்.