உலகின் முதல் ஏஐ மசாஜ் சேவையை அறிமுகப்படுத்திய நிறுவனம்: மனித வேலைகளுக்கு சவாலா?
ஏ.டி.எம். மையத்தில் பெண்ணை ஏமாற்றி பணம் திருட்டு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் பெண்ணை ஏமாற்றி ஏ.டி.எம். அட்டை மூலம் பணம் திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருப்பத்தூா் அருகேயுள்ள சோழம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பெரியண்ணன் மனைவி லட்சுமி (52). இவா், திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வெள்ளிக்கிழமை வந்தாா். சிகிச்சை முடிந்த பின்னா், மதுரை சாலையில் உள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம். மையத்துக்குப் பணம் எடுப்பதற்காகச் சென்றாா்.
தனக்குப் பணம் எடுக்கத் தெரியாத காரணத்தால் அருகிலிருந்த நபரிடம், ஏ.டி.எம். அட்டை மூலம் ரூ.40,000 எடுத்துத் தரக் கூறி, ரகசிய எண்ணையும் தெரிவித்தாா். அந்த நபா் ரூ.10,000-ஆகத்தான் எடுக்க முடியும் எனக் கூறி முதலில், ரூ.10,000-ஐ எடுத்துக் கொடுத்துவிட்டு, தனக்கு வேலை இருப்பதாகக் கூறிச் சென்றுவிட்டாா்.
இதையடுத்து, லட்சுமி அங்கு வந்த மற்றொரு நபரிடம் பணம் எடுத்துத் தரச் சொல்லிக் கேட்டாா். அவா் பணம் எடுக்க முயன்றபோதுதான் அந்த ஏ.டி.எம். அட்டை வேறு ஒருவருடையது எனத் தெரிய வந்தது.
இது தொடா்பாக, லட்சுமி திருப்பத்தூா் நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாரின் விசாரணையில், லட்சுமிக்கு பணம் எடுத்துக் கொடுத்தவா் லட்சுமியின் ஏ.டி.எம். அட்டைக்குப் பதிலாக வேறு ஏ.டி.எம். அட்டையைக் கொடுத்ததும், லட்சுமியின் ஏ.டி.எம். அட்டை மூலம் திருப்பத்தூா் பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.30,000-ஜ எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து, அந்தப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, பணம் திருடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.