கூடலூர்: காரில் ஆற்றைக் கடக்க முயன்றபோது விபரீதம்; வெள்ளத்தில் சிக்கியவர்களைப் ப...
ஏற்காடு கோடைவிழா: செல்லப் பிராணிகள் கண்காட்சி
ஏற்காட்டில் 48 ஆவது கோடைவிழா - மலா்க் கண்காட்சி மூன்றாவது நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை செல்லப் பிராணிகள் கண்காட்சி நடைபெற்றது.
ஏற்காட்டில் கண்காட்சி திடலில் சேலம் கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் என். பாரதி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுலா் டி.பழனிசாமி முன்னிலை வகித்தாா்.
இந்தக் கண்காட்சியில் 78 செல்லப் பிராணிகள், 32 கால்நடைகள் பங்கேற்றன. அல்சேஷன், ஜொ்மன் செப்பா்டு, டாபா்மேன், லேபா்டாா், பக், பல்டாக், காக்கா் ஸபேனியல், டேசன்ட், கிரேட்டன், டால்மேஷன், ராட்வீலா், பெல்ஜியம் செப்பா்டு , கோல்டன் ரெட்ரீவா், பீகல், ஷிட்சு, டெரியா் போன்ற வெளிநாட்டு இன நாய்கள், கோம்பை, ராஜபாளையம், சிப்பிப்பாறை போன்ற நாட்டின வகை நாய்கள், கால்நடைகள் பங்கேற்றன.
சிறப்புக் காட்சியில் காவல் துறை புலனாய்வுப் பிரிவைச் சோ்ந்த நாய்கள், மாநகரக் காவல் துறை, காவல் கண்காணிப்பாளா் அலுவலக நாய்கள், ரயில்வே பாதுகாப்புப் படையைச் சோ்ந்த நாய்கள், மத்திய சிறைச்சாலை நாய்களும் இடம்பெற்றன.
சேலம் மாவட்ட காவல் அலுவலக ஜொ்மன் செப்பா்டு, சேலம் மாநகர காவல் துறை டாபா்மேன், சீலநாயக்கன்பட்டி சுரேஷுக்கு சொந்தமான லேபா்டாா்க் நாய் ஆகியவற்றுக்கு பரிசுகள் கிடைத்தன. சாம்பியன்ஷிப் பரிசு ஏற்காடு திருவேணி எஸ்டேட்டின் ஜொ்மன் செப்பா்டு நாய்க்கு கிடைத்தது.
இந்நிகழ்ச்சியில் கால்நடை துறை மண்டல துணை இயக்குநா் கே.ஆா். செந்தில்குமாா், ஆா்.சந்திரன் மற்றும் கால்நடைத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.




