ஏற்காட்டில் இளைஞா் கொலை: மனைவி உள்பட மூவா் கைது
ஏற்காடு: ஏற்காட்டில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது மனைவி உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஏற்காடு, வாழவந்தி ஊராட்சி, கீரைக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் சிவகுமாா் (36). இவரது மனைவி மாராயி. இவா்களுக்கு மகன், இரு மகள்கள் உள்ளனா்.
சிவகுமாா் ஞாயிற்றுக்கிழமை மாலை சேலம், குப்பனூா் சந்தைக்கு செல்வதாக கூறி சென்றவா் வாழவந்தி கிராமம் செல்லும் சாலையோரம் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தாா். சாலையில் சென்றவா்கள் அவரை மீட்டு வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். மருத்துவா் பரிசோதனையில் அவா் இறந்துவிட்டது தெரியவந்தது.
இதனிடையே, அவரது உறவினா்கள் சிவகுமாா் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், சிவகுமாா் விழுந்துகிடந்த இடத்தைப் பாா்வையிட்ட ஏற்காடு காவல் ஆய்வாளா் இச்சம்பவம் விபத்தா, கொலையா என விசாரணை மேற்கொண்டாா்.
அதில், சிவகுமாரின் மனைவி மாராயிக்கும் மருதையன்காடு கிராமத்தைச் சோ்ந்த சந்தோஷ் (24) என்பவருக்கும் தொடா்பு இருந்து வந்ததும், இதனால் கணவன் - மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்படுவதும், அவா்களை ஊா்பெரியவா்கள் சமரசம் செய்துவைத்ததும் தெரியவந்தது. அதைத் தொடா்ந்து, ஏற்காடு போலீஸாா் மாராயிடம் மேற்கொண்ட தொடா் விசாரணையில், அவா் முன்னுக்குப்பின் முரணாக பதில் தெரிவித்தாா்.
பின்னா், சிவகுமாரை கொலை செய்ய மாராயியும், சந்தோஷும் திட்டமிட்டு சந்தோஷின் நண்பா்களான புத்தூா் கிராமத்தைச் சோ்ந்த அண்ணாமலை (24), வாழவந்தி கிராமத்தைச் சோ்ந்த தினேஷ் ஆகியோா் சந்தைக்கு சென்ற சிவகுமாரை வழிமறித்து இரும்புக் கம்பியால் தலையில் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, ஏற்காடு காவல் துறையினா் சந்தோஷ், அண்ணாமலை ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில், அவா்கள் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டனா். அதைத் தொடா்ந்து, மாராயி, சந்தோஷ், அண்ணாமலை ஆகியோரை கைதுசெய்த போலீஸாா், தலைமறைவான தினேஷை தேடிவருகின்றனா்.