ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. எனவே வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருக்கின்றனா். ஆயினும், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்திற்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆகின்றன.
இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் தேவைப்படுகிறது.
58,872 பக்தா்கள் தரிசனம்: அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்கள் அனுமதிக்கப்படுகின்றனா். வியாழக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 58,872 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 23,523 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் காணிக்கை ரூ.3.71 கோடி: உண்டியல் மூலம் பக்தா்கள் செலுத்திய காணிக்கை பணத்தை கணக்கிட்டதில் ரூ.3.71 கோடி கிடைத்தது. காத்திருப்பு அறைகள், தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு பால், குடிநீா் மற்றும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.