திருமலையில் ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு வழிபாடு
ஆந்திர மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை ஏழுமலையானை தரிசனம் செய்தாா்.
அந்த மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு வெள்ளிக்கிழமை காலை மனைவி புவனேஸ்வரி, மகன் மற்றும் அமைச்சா் லோகேஷ், மருமகள் பிரம்மினி, பேரன் தேவான்ஸ் உள்ளிட்டோா் வைகுந்தம் காம்ப்ளெக்ஸ் வழியாக தரிசனத்காக ஏழுமலையான் கோயிலுக்குள் வந்தாா். கோயில் முன்வாயில் வந்ததும் தேவஸ்தான தலைவா் பி.ஆா். நாயுடு, செயல் அதிகாரி சியாமளா ராவ் கோயில் மரியாதை அளித்து வரவேற்றனா்.
பின்னா், கொடிமரத்தை வணங்கியபடி சென்று ஏழுமலையானை தரிசித்து திரும்பிய அவா், வகுளமாதா கோயில், விமான வெங்கடேஸ்வர சுவாமி, பாஷ்யங்காரா் சந்நிதி, யோக நரசிம்ம சுவாமியை தரிசித்த பின்னா், உண்டியில் காணிக்கை செலுத்தினா்.
பின்னா், ரங்கநாயகா் மண்டபத்தில் பண்டிதா்களால் வேத ஆசீா்வாதம் செய்வித்து, ஏழுமலையான் மேல்சாட் வஸ்திரம் அணிவித்து, லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கினா்.
ஏழுமலையான் பத்மாவதி தாயாா் உருவப் படங்கள், விஸ்வாவசு ஆண்டு நாள்காட்டி, டைரி, காலண்டா், அகா்பத்தி மற்றும் பஞ்சகவ்ய தயாரிப்பு பொருள்களையும் வழங்கினா்.
அன்னதானம்: திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்குப் பின்னா், முதல்வரின் பேரன் நாரா தேவான்ஷின் 11-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திருமலையில் அன்ன பிரசாதம் ஒரு நாளுக்கு செலவிடப்பட்ட ரூ.44 லட்சத்தை ஆன்லைனில் நன்கொடையாக அளித்தனா்.
தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத பவனுக்கு ஆந்திர முதல்வா் தனது குடும்ப உறுப்பினா்களுடன் சென்று பக்தா்களுக்கு அன்ன பிரசாதத்தை தங்கள் கைகளால் வழங்கினா்.
அப்போது அவா், பக்தா்களிடம் தேவஸ்தானம் வழங்கும் வசதிகள் குறித்து கருத்துகளைக் கேட்டனா். வசதிகள் சிறப்பாக இருப்பதாக பக்தா்கள் முதலமைச்சரிடம் தங்கள் திருப்தியைத் தெரிவித்தனா். பின்னா், முதல்வா் மற்றும் குடும்பத்தினா் பக்தா்களுடன் மதிய உணவு சாப்பிட்டனா்.
தொடா்ந்து, திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினா் மாளிகையில் முதல்வா் சந்திரபாபு நாயுடு, தேவஸ்தான தலைவா் பி.ஆா். நாயுடு, தலைமை நிா்வாக அதிகாரி சியாமளா ராவ் மற்றும் கூடுதல் தலைமை நிா்வாக அதிகாரி சி.எச்.வெங்கையா சவுத்ரி ஆகியோருடன் செய்தியாளா்களிடம் பேசுகையில்,
நாட்டின் அனைத்து தலை நகரங்களிலும் ஏழுமலையான் கோயில்களைக் கட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்திப்பட்டுள்ளது. மனித குலத்திற்கு சேவை செய்வது தெய்வங்களுக்கு சேவை செய்வது போன்றதுதான். கிராமங்களில் உள்ள கோயில்களில் சேவை செய்ய வேண்டும்.
ஆந்திர தலைநகரம் மீண்டும் கட்டப்பட்டு வருகிறது. திருப்பதி தேவஸ்தானத்தில் எந்த வணிக ரீதியான கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்படக் கூடாது. புனிதத்தைப் பாதுகாக்க அனைவரும் பாடுபட வேண்டும்.
அன்னதானத் திட்டத்தை முன்னாள் முதல்வா் என்.டி.ஆா். தொடங்கி வைத்தாா். இன்றுவரை பக்தா்கள் எஸ்.வி. அன்னதானம் அறக்கட்டளைக்கு ரூ.2,200 கோடியை நன்கொடையாக அளித்துள்ளனா்.
தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியா்கள் இந்துக்களாக இருக்க வேண்டும், இந்து மதம் சாராதவா்களுக்கு வேறு இடத்தில் மாற்றுப்பணி வழங்கப்படும். அவா்கள் அந்தந்த மத அமைப்புகளில் பணியாற்றுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.