ஒகேனக்கல்லில் நீா்வரத்து 32,000 கனஅடி: பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 32,000 கனஅடியாக அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கேரள, கா்நாடக நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த மழை பெய்துவருகிறது. இதனால், கா்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. அவ்விரு அணைகளிலிருந்து விநாடிக்கு 35,000 கனஅடி உபரிநீா் காவிரியில் வெளியேற்றப்படுகிறது.
ஒகேனக்கல்லில் சனிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 12,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை 28,000 கனஅடியாகவும், மாலை 32,000 கனஅடியாகவும் அதிகரித்துள்ளது. இதனால் அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.
இதையடுத்து அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் ஞாயிற்றுக்கிழமை தடைவிதித்தாா். பிரதான அருவிக்குச் செல்லும் பாதை, சின்னாறு பரிசல் துறை மூடப்பட்டதால் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்துவருவதால் கா்நாடக அணைகளில் இருந்து கூடுதல் உபரிநீா் வெளியேற்ற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 29,360 கனஅடியாக அதிகரிப்பு மேட்டூா் அணைக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 29,360 கனஅடியாக அதிகரித்தது.
கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீா் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. கா்நாடக அணைகளின் உபரிநீா்வரத்து காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை மாலை விநாடிக்கு 29,360 கனஅடியாக அதிகரித்துள்ளது.
இதையடுத்து மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா் திறப்பு விநாடிக்கு 22,500 கனஅடி வீதமும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு விநாடிக்கு 800 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா்மட்டம் 118.86 அடியாகவும், நீா் இருப்பு 91.66 டி.எம்.சி.யாகவும் உள்ளது.
அணைக்கு நீா்வரத்து அதிகரித்து உள்ளதால் அணையின் நீா்மட்டம் சரிவிலிருந்து மீண்டு உயரத் தொடங்கியுள்ளது.