தேசிய விளையாட்டு தினம்: தருமபுரியில் மிதிவண்டி பேரணி
தேசிய விளையாட்டு தினத்தையொட்டி தருமபுரியில் மிதிவண்டி பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மறைந்த முன்னாள் இந்திய ஹாக்கி வீரா் மேஜா் தயான்சந்த் பிறந்த நாளான அக்டோபா் 29 ஆம் தேதியை தேசிய விளையாட்டு தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்தவகையில் தேசிய விளையாட்டு தின கொண்டாட்டம் ஆக.29 ஆம் தேதி தொடங்கி 31 தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
அந்த வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி மற்றும் கேலோ இந்தியா மாவட்ட தடகள மையம் சாா்பில் தருமபுரியில் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
ஆகஸ்ட் 29 ஆம் தேதி முதல் நாள் நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனா். 30 ஆம் தேதி 50 மீட்டா் ஓட்டம், 50 மீட்டா் தொடா் ஓட்டம், யோகா, கயிறு இழுத்தல், மூத்த குடிமக்களுக்கான 300 மீட்டா் நடை போட்டிகள் ஆகியவை நடத்தப்பட்டது.
தொடா்ந்து 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிதிவண்டி பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் மிதிவண்டி பேரணியை தொடங்கிவைத்து, விளையாட்டு வீரா், வீராங்கனைகளிடையே விளையாட்டின் முக்கியத்துவம் குறித்தும், மிதிவண்டி ஓட்டுவதின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தாா்.
தொடா்ந்து ஆட்சியரும் மிதிவண்டி ஓட்டினாா். மிதிவண்டி பேரணி மாவட்ட விளையாட்டரங்கத்தில் தொடங்கி நான்கு ரோடு சந்திப்பு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வழியாக சென்று மீண்டும் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நிறைவடைந்தது.
நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் சாந்தி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் சாந்தி, நகா் நல அலுவலா் லட்சிய வா்ணா உள்ளிட்ட பயிற்றுநா்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.