ஒசூரில் ரூ. 3 கோடியில் குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகள் தொடக்கம்
ஒசூா்: ஒசூா் மாநகராட்சியில் உயிரி தொழில்நுட்பம் முறையில் குப்பைகளை பிரித்து, இயற்கை உரமாக்கி விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையில் நடைபெறும் பணிகளை ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
தூய்மை பாரத திட்டம் 2024-25-இன் கீழ் தாசேப்பள்ளி உரக்கிடங்கில் உள்ள 41 ஆயிரத்து 400 மெட்ரிக் டன் குப்பைகளை ரூ. 3.19 கோடி மதிப்பீட்டில் ‘பயோ மைனிங்’ முறையில் பிரித்தெடுக்கும் பணிகள் தொடங்கிவைக்கப்பட்டன.
இப்பணியை ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா, மாநகராட்சி ஆணையா் ஷபீா் ஆலம், துணை மேயா் சி.ஆனந்தய்யா ஆகியோா் தொடங்கிவைத்தனா். 9 மாத காலத்துக்குள் இப்பணி முடிவடைந்த பின்னா், இப்பகுதியில் மரங்கள் வைத்து பராமரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தொடக்க விழாவில், மாநகராட்சி பொது சுகாதாரக் குழுத் தலைவா் என்.எஸ்.மாதேஸ்வரன், மாமன்ற உறுப்பினா்கள், மாநகர நல அலுவலா், இளநிலை பொறியாளா் மற்றும் துப்புரவு அலுவலா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.