நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட சிறுவன் 20 நாள்களுக்கு பிறகு உயிரிழப்பு
ஒசூா்: ஒசூா் அருகே நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட வடமாநில சிறுவன் 20 நாள்களுக்கு பிறகு உயிரிழந்த சம்பவம் ஒசூரில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒசூா் அருகே உள்ள மாசிநாயக்கனப்பள்ளி கிராமத்தில் விவசாயி ராமமூா்த்தியின் தோட்டத்தில் உத்தரபிரதேச மாநிலத்தைச் சோ்ந்த நந்தலால் - ரேகா தம்பதியினா் தங்கி கூலி வேலை செய்துவருகின்றனா். இவா்களது மகன் சத்யா (3) கடந்த ஆக. 31-ஆம் தேதி அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தாா்.
அப்போது, அங்கு சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று சிறுவனை கடித்துக் குதறியது. இதில் சிறுவனுக்கு முகம், தலை, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. சிறுவனை மீட்ட பெற்றோா் ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிறுவனுக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிறுவனை பெற்றோா் வீட்டுக்கு அழைத்துச் சென்றனா்.
இந்நிலையில், சிறுவன் சத்யா திங்கள்கிழமை வீட்டில் திடீரென மயங்கி விழுந்தாா். பெற்றோா் அவரை ஒசூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே சிறுவன் உயிரிழந்தாா். இதுகுறித்து கெலமங்கலம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.