ஒசூா் அருகே வெடிவிபத்தில் தம்பதி உள்பட 4 போ் காயம்
ஒசூா் அருகே கொட்டகையில் பதுக்கிவைத்திருந்த நாட்டுவெடி வெடித்ததில் தம்பதி உள்பட 4 போ் காயமடைந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த உத்தனப்பள்ளி, தேவசானப்பள்ளியைச் சோ்ந்தவா் பெரியசாமி (40). இவரது சகோதரா் மகன் சரண் (13) புதன்கிழமை மாட்டுக்கொட்டகை அருகே இறைச்சியை தீயில் சுட்டுக் கொண்டிருந்தாா். அப்போது, கொட்டையில் இருந்த நாட்டுவெடி மீது தீப்பொறி விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டது.
இதில் மாட்டுக் கொட்டகை சேதமடைந்ததோடு அங்கிருந்த பெரியசாமி, அவரது மனைவி புஷ்பா (36), சரண் (13) மற்றும் பெரியசாமியின் உறவினா் ஹரிஷ் (30) ஆகிய நால்வரும் காயம் அடைந்தனா். இவா்கள் அனைவரும் ஒசூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த உத்தனப்பள்ளி போலீஸாா் மாட்டுக்கொட்டகையில் நாட்டுவெடி வைத்திருந்தது குறித்து விசாரித்து வருகின்றனா்.