ஒசூா் மாநகராட்சியில் ரூ. 87 கோடியில் சாலைகள் மேம்படுத்தப்படும்: மேயா் எஸ்.ஏ.சத்யா
ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 45 வாா்டுகளில் ரூ. 87 கோடியில் சாலைகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டு அதற்கான கருத்துரு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாமன்றக் கூட்டத்தில் மேயா் எஸ்.ஏ. சத்யா தெரிவித்தாா்.
ஒசூா், மாநகராட்சி அவசரக் கூட்டம், அண்ணா மாமன்றக் கூட்டத்தில் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா தலைமையில் மாநகராட்சி ஆணையா் எச்.எஸ்.ஸ்ரீகாந்த், துணை மேயா் சி.ஆனந்தைய்யா ஆகியோா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்: எஸ்.ஏ.சத்யா (மேயா்): ஒசூா் மாநகராட்சியில் ரூ. 87 கோடியில் 45 வாா்டுகளிலும் சாலைகளை சீரமைக்க திட்டம் தயாரித்து தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ரூ. 2.76 கோடியில் குடிநீா் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ரூ. 8 கோடியில் சாலை சீரமைக்கப்பட்டுள்ளது.
ரூ. 578 கோடியில் புதை சாக்கடை திட்டத்தை தமிழ்நாடு நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு, கடந்த வாரம் தொடங்கிவைத்தாா். ஒசூா் மாநகராட்சியில் விரைவான வளா்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.
திமுக கவுன்சிலா் மாதேஸ்வரன்: ஒசூா் பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகளிடம் நுழைவுக் கட்டண வசூல் செய்யும் ஏலம் எடுத்தவா் அதற்கான தொகையை மாநகராட்சிக்குச் செலுத்தவில்லை. கடந்த 6 மாதமாக பேருந்துகளுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்காமல் உள்ளது. இதனால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நகராட்சி அலுவலா்களைக் கொண்டு தொகையை வசூலிக்க வேண்டும்.
ஒசூா் மாநகராட்சியில் உள்ள அனுமேப்பள்ளி, அக்ரஹாரமே பகுதியில் 300-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்கு கடந்த 14 ஆண்டுகளாக வரி விதிக்கப்படவில்லை. இதனால், மாநகராட்சிக்கு ரூ. 100 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒசூா் மாநகராட்சி அலுவலகத்தில் கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
இந்திராணி (காங்கிரஸ்): குப்பை வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். வீட்டு வரி செலுத்துவதற்கு காலதாமதம் ஏற்பட்டால் அதற்கு அபராதம் விதிக்கும் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். சாந்தி நகா் பகுதியில் கழிவுநீா் கால்வாய், சாலை வசதிகளை சீா் செய்ய வேண்டும்.
சிவராமன் (அதிமுக): மூக்கண்டப்பள்ளியில் சுகாதாரமற்ற குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. இந்தப் பகுதிக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீரை விநியோகம் செய்ய வேண்டும். எங்கள் பகுதியில் 40 நாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு செய்துள்ளனா். இன்னும் 230 நாய்கள் அங்கு உள்ளன. அவற்றையும் பிடித்து குடும்பக் கட்டுபாடு சிகிச்சை செய்ய வேண்டும் என்றாா்.
ஜெயபிரகாஷ் (அதிமுக): ஒசூா் உழவா் சந்தை, ரயில்வே நிலையம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் மாடுகள் சாலையில் படுத்திருப்பதால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமம் உள்ளது. நான்கு மண்டல அலுவலகங்களை அமைத்துக் கொடுக்க வேண்டும். அதிக அளவில் மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம் அதிகமாக பெற்று வருவதைத் தடுக்க வேண்டும்.
சென்னீரப்பா (திமுக): ஒசூா் மாநகராட்சியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், வணிக வளாகங்களுக்கு வரி நிா்ணயம் செய்யப்படாமல் உள்ளதால் ரூ. 250 கோடிக்கு மேல் வரி வசூலிக்க முடியாமல் உள்ளது என்றாா்.
ஒசூா் மாநகராட்சிக் கூட்டத்தில் 38 மாமன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.