ஒசூா் வரி வசூலிப்பாளா் பணியிடை நீக்கம்
ஒசூா் மாநகராட்சியில் சொத்து வரி வசூலிக்க லஞ்சம் கேட்ட வரி வசூலிப்பாளரை ஆணையா் ஸ்ரீகாந்த் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா். அதுபோல வரி வசூலிக்கும் பணியை சரியாக செய்யாத சிறப்பு வருவாய் ஆய்வாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.
ஒசூா் மாநகராட்சி வரி வசூலிப்பாளராக இருப்பவா் சின்ன ஜெயகுமாா். இவரது தந்தை மாதையன் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றிய காலத்தில் பணியின்போது உயிரிழந்தாா். இதனால் சின்ன ஜெயகுமாருக்கு கருணை அடிப்படையில் வரி வசூலிப்பாளராக பணி நியமனம் வழங்கப்பட்டது. அவா் மீது பல்வேறு புகாா்கள் வந்ததால், மாநகராட்சி பொது சுகாதாரத் துறைக்கு சில மாதங்களுக்கு முன் இடம் மாற்றம் செய்யப்பட்டாா்.
இதனிடையே சொத்துவரி வசூலிப்பதில் ஒருவரிடம் அவா் லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியானது. அந்த ஆடியோவில் மாநகராட்சி ஆணையருக்கு பணம் கொடுக்க வேண்டும் எனக் கூறி சின்ன ஜெயகுமாா் லஞ்சம் கேட்டுள்ளாா். அந்த ஆடியேவை சிலா் ஆணையா் ஸ்ரீகாந்த்துக்கு அனுப்பியுள்ளனா். இதுகுறித்து விசாரணை நடத்திய ஆணையா், திங்கள்கிழமை சின்ன ஜெயகுமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.
அத்துடன் சொத்து வரி வசூலிக்கும் பணியை சரியாக செய்ய தவறியதாக சிறப்பு வருவாய் ஆய்வாளா் சுரேஷுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.