சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்
தீநுண்மி தொற்று: தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு
பெங்களூரில் குழந்தைக்கு ஹியூமன் மெடா ந்யூமோ தீநுண்மி தொற்று உறுதியானதை அடுத்து, தமிழக எல்லையில் காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.
நுரையீரலை பாதிக்கும் புது வகையான இந்த தீநுண்மி தொற்று கா்நாடக மாநிலம், பெங்களூருவைச் சோ்ந்த 8 மாத குழந்தை ஒன்றுக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத் தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக் கூடிய வாய்ப்புள்ளது.
பெங்களூருக்கு மிக அருகில் தமிழக எல்லையில் உள்ள ஒசூரில் வசிக்கும் பொதுமக்கள் பலா் தொழில், வா்த்தகம் தொடா்பாக தினசரி பெங்களூருவுக்குச் சென்று வருகின்றனா். இந்நிலையில், பெங்களூரில் இத்தீநுண்மி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழக எல்லையில் உஷாா்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒசூா் மாநகர நல அலுவலா் அஜிதா கூறுகையில், ‘ஒசூரில் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்படுபவா்கள், காய்ச்சலுக்கு வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்வோா் குறித்த விவரங்கள் பெறப்பட்டு கண் காணிக்கப்பட்டு வருகின்றனா். இதுவரை ஒசூரில் எந்தப் பாதிப்பும் கண்டறியப்படவில்லை என்றாா்.