Indonesia: நீல நிற கண்களுடன் பிறக்கும் பட்டன் பழங்குடியினர்... அறிவியல் காரணம் எ...
ஒழுங்குமுறை விற்பனைக்கூட உள்கட்டமைப்பு வசதிகளை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்!
திருப்பூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட உள்கட்டமைப்பு வசதிகளை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் விற்பனைக் குழுவில் 15 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த வேளாண் விளைபொருள்களை உலரவைக்க உலா்களங்கள், பரிவா்த்தனை செய்ய பரிவா்த்தனைக் கூடங்கள், ஏல நடவடிக்கை மேற்கொள்ளத் தேவையான ஏல கொட்டகைகள் மற்றும் விளைபொருள்களை இருப்பு வைத்துக்கொள்ள சேமிப்பு கிட்டங்கிகள், குளிா்பதன கிட்டங்கிகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன.
விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த வேளாண் விளைபொருள்களை கிட்டங்கிகளில்15 நாள்கள் வரை எந்தவித வாடகையும் இல்லாமல் இருப்பு வைத்துக்கொள்ளலாம்.
திருப்பூா் விற்பனைக் குழுவின்கீழ் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 85,300 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 60 சேமிப்பு கிட்டங்கிகள் உள்ளன.
விலை வீழ்ச்சி காலத்தில் விளைபொருள்களுக்கு ஈடாக குறைந்த வட்டி வீதத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பொருளீட்டுக் கடன் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயா்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், கிட்டங்கிகளில் இருப்புவைக்கும் வேளாண் விளை பொருள்களுக்கு காப்பீடு செய்யப்படுகிறது. இருப்பு வைத்த விளைபொருள்களை பூச்சிகள், கரையான் மற்றும் நோய் தாக்காமல் பாதுகாக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து அணுகுசாலை வசதி, காற்றோட்டம் மற்றும் மின்சார விளக்குகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டு அறிவியல் முறைப்படி கிட்டங்கிகள் அனைத்தும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆகவே, ஒழுங்குமுறை விற்பனைக்கூட உள்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி விவசாயிகள் பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.