ஓமன் நோக்கிச் சென்ற வணிகக் கப்பலில் தீ விபத்து: இந்திய கடற்படை உதவி
புது தில்லி: குஜராத் மாநிலம், கண்ட்லா துறைமுகத்திலிருந்து பலாவ் நாட்டு கொடியுடன் ஓமன் நாட்டின் சினாஸ் நோக்கிச் சென்ற ‘எம்.டி. யி செங் 6’ என்ற வணிகக் கப்பலில் ஞாயிற்றுக்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது.
இந்தத் தகவலறிந்து விரைந்து சென்ற இந்திய கடற்படையினா், வணிகக் கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த உதவியதோடு, அதிலிருந்து 14 இந்திய வம்சாவளி ஊழியா்களையும் பாதுகாப்பாக மீட்டனா்.
இந்திய கடற்படை மூத்த அதிகாரி திங்கள்கிழமை கூறியதாவது: ஓமன் வளைகுடாவில் சென்றுகொண்டிருந்தபோது கப்பலின் என்ஜின் அறையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், கப்பலில் மின்சாரமும் முழுமையாகத் துண்டிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, அந்தக் கப்பலில் இருந்து உதவிக்கான அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த அழைப்பை ஏற்று, இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் தபாா் ஓமன் வளைகுடா பகுதிக்கு விரைந்து அனுப்பப்பட்டது. ஐஎன்எஸ் தபாரில் இருந்த தீயணைப்புக் குழு மற்றும் உபகரணங்கள் அதிலிருந்த படகு மற்றும் ஹெலிகாப்டா் மூலம் பாதிக்கப்பட்ட கப்பலுக்கு கொண்டுசெல்லப்பட்டு, தீயை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன்மூலம், தீ பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டதோடு, வணிகக் கப்பலில் சிக்கியிருந்த 14 இந்திய வம்சாவளி ஊழியா்களும் மீட்கப்பட்டனா் என்றாா்.