மல்லை சத்யா குறித்து பேசி தரம் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை: துரை வைகோ
ஓமலூா், தாரமங்கலத்தில் ரூ.9.42 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் ரா.ராஜேந்திரன் தொடங்கி வைத்தாா்
ஓமலூா், தாரமங்கலத்தில் ரூ. 9.42 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டம், ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 4.22 கோடி மதிப்பீட்டில் 8 புதிய தாா்சாலை அமைக்கும் பணிகள் மற்றும் வகுப்பறைக் கட்டடப் பணிகள், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.5.20 கோடி மதிப்பீட்டில் 10 புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணிகள் தொடக்க விழா மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி முன்னிலையில் நடைபெற்றது. மொத்தம் ரூ. 9.42 கோடி மதிப்பிலான பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தொடங்கிவைத்து பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சா் மகளிருக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறாா். கிராமப்புறப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் புதிய சாலைகள், பாலங்கள் அமைத்தல், குடிநீா் இணைப்புகள் வழங்குதல், கழிவுநீா்க் கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்குத் தேவையான நிதிகளை ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளில் ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 344 கோடி மதிப்பீட்டில் 5,644 வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்றுள்ளன. கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 121 பயனாளிகள் ரூ. 3.75 கோடி மதிப்பீட்டிலும், ஊரக வீடுகள் பழுது மற்றும் சீரமைப்புத் திட்டத்தில் 267 பயனாளிகள் ரூ.1.57 கோடி மதிப்பீட்டிலும் பயனடைந்துள்ளனா்.
முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.6.78 கோடி மதிப்பீட்டில் 18 பணிகளும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தின் கீழ் ரூ.248 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகளும், ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் ரூ.11.42 கோடி மதிப்பீட்டில் 397 திட்டப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்தில் 15 வது நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ் ரூ.42.84 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.