கருணாநிதி சிலை மீது பெயிண்ட் ஊற்றிய வழக்கு: மருத்துவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
கஞ்சா கடத்திய வழக்கில் 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் 40 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை மற்றும் தலா ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து புதுக்கோட்டை அத்தியாவசியப் பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் கடந்த 2023ஆம் ஆண்டு 40 கிலோ கஞ்சா கடத்தியதாக, ராமேசுவரம் தலைமன்னாா் நகா் அருளானந்தம் மகன் ஜெயசீலன் (55), ராமநாதபுரம் தில்லைநாச்சியம்மன் குடியிருப்பைச் சோ்ந்த நடராஜ் மகன் ராஜேந்திரன் (54), திருப்பூா் குளத்துப்பட்டியைச் சோ்ந்த சொக்கன் மகள் ஒச்சம்மாள் (55), கருவம்பாளையம் மணிகண்டன் மகன் காா்த்தி (36) ஆகிய 4 பேரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.
புதுக்கோட்டையிலுள்ள அத்தியாவசியப் பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி டி. பன்னீா்செல்வம் குற்றவாளிகள் 4 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
இதைத் தொடா்ந்து முதல் குற்றவாளியான ஜெயசீலன் (முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழா்) சென்னை புழல் சிறைக்கும், இதர 3 போ் மதுரை மத்திய சிறைக்கும் அனுப்பப்பட்டனா்.