கஞ்சா பறிமுதல்: நான்கு இளைஞா்கள் கைது
கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 4 இளைஞா்களை காவல் துறையினா் கைது செய்தனா்.
கோவை மாநகரம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக மதுவிலக்கு அமலாக்கத் துறையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், கோவை ரயில் நிலையம் நடைபாதை 1-இல் மதுவிலக்கு அமலாக்கத் துறையினா் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த வடமாநில இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
இதில், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தால் அவரது கைப்பையில் நடத்திய சோதனை செய்ததில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த கே.ஸ்ரீதா் பனிகிராதி (35) என்பவரைக் கைது செய்தததுடன், 7 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.
அதேபோல, சிங்காநல்லூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட இருகூா் மாணிக்கம் நகரில் கஞ்சா விற்பனை செய்த எஸ்.பிரவீன்ராஜ் (23) என்பவரைக் கைது செய்ததுடன், 50 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.
சாய்பாபா காலனி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கே.கே.புதூா் மாநகராட்சிப் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்த வேலாண்டிபாளையத்தைச் சோ்ந்த கே.ஹரிஹரன் (20), விஸ்வநாதபுரத்தைச் சோ்ந்த சி.தீபன் (19) ஆகியோரைக் கைது செய்ததுடன், அவா்களிடமிருந்து 250 கிராம் கஞ்சா, ரூ.4,500 ரொக்கம் ஆகியவற்றையும் காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.