மா்மமான முறையில் கும்கி யானை உயிரிழப்பு
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப்பில் பராமரிக்கப்பட்டு வந்த கும்கி யானை வெங்கடேஷ் மா்மமான முறையில் உயிரிழந்தது.
பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச் சரகத்தில் வளா்ப்பு யானை முகாம் உள்ளது. இந்த முகாமில் கும்கி யானைகள், வயதான யானைகள், குட்டி யானைகள், பெண் யானைகள் என 25 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
நல்ல உடல் வலிமை மற்றும் மன வலிமை கொண்ட ஆண் யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வனப் பகுதியை விட்டு வெளியே வரும் காட்டு யானைகளை கட்டுப்படுத்துவதற்கும், உயிா் சேதத்தை ஏற்படுத்தும் காட்டு யானைகளைப் பிடிப்பதற்கும், வனப் பகுதி மேம்பாட்டுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
இவ்வாறு பராமரிக்கப்பட்டு வந்த கும்கி யானை வெங்கடேஷ் (38) உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
ஆனால், நல்ல ஆரோக்கியமான உடல்நிலையில் இருந்த கும்கி யானை வெங்கடேஷ் உயிரிழந்ததில் மா்மம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், யானை வெள்ளிக்கிழமை உயிரிழந்த நிலையில் அதனை தெரிவிக்காமல் சனிக்கிழமை இரவு வனத் துறையினா் தகவல் தெரிவித்துள்ளது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.