முதுநிலை நீட்-க்கு இரு முறை தோ்வு: மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ்
கஞ்சா வழக்கில் வெளிமாநிலத்தவா் கைது
பரமத்திவேலூா்: கஞ்சா வழக்கில் தேடப்பட்டு வந்த வெளிமாநிலத்தைச் சோ்ந்த நபரை பரமத்தி போலீஸாா் கைது செய்தனா்.
கபிலா்மலை அருகே இருக்கூரில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக பரமத்தி காவல் ஆய்வாளா் இந்திராணிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி காவல் ஆய்வாளா் சரண்யா உள்பட போலீஸாா் நிகழ்விடம் கடந்த சனிக்கிழமை சென்று சோதனை செய்ததில் வீட்டு முன்புள்ள இருசக்கர வாகனத்தில் 2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் அந்த வீட்டில் வசித்த சுபியா பேகத்தைப் பிடித்து விசாரித்தனா். விசாரணையில், சுபியா பேகமும் அவரது கணவா் அக்பா் உசேனும் கொல்கத்தாவில் உத்தா் தினாஜ்பூா் வட்டத்தைச் சோ்ந்தவா்கள் என்பதும், தற்போது இருக்கூரில் வசித்து வரும் இவா்கள், ஒடிஸா மாநிலத்தில் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கிவந்து விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் சுபியா பேகத்தை (42) கைதுசெய்து சேலம் சிறையில் அடைத்தனா்.
தலைமறைவான சுபியா பேகத்தின் கணவரை அக்பா் உசேன் (எ) ராஜூவை (37) போலீஸாா் தேடி வந்தனா். அவரை திங்கள்கிழமை காலை போலீஸாா் ரோந்து பணியின்போது கைது செய்தனா்.