கடலூர் ரயில் விபத்து: 13 பேரிடம் தனித்தனியாக விசாரணை!
கடலூா் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விவகாரத்தில் கேட் கீப்பா், ரயில் ஓட்டுநா்கள் உள்ளிட்ட 13 பேரிடம் தனித்தனியாக விசாரணை நடைபெற்று வருகின்றன.
கடலூா் மாவட்டம், செம்மங்குப்பம் ரயில்வே தண்டவாளத்தை செவ்வாய்க்கிழமை கடக்க முயன்ற தனியாா் பள்ளி வேன் மீது, அவ்வழியே வந்த விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதி 3 மாணவா்கள் உயிரிழந்தனா். இந்த விவகாரத்தில் ரயில்வே கேட் திறந்திருந்ததாகவும், அவசரமாகச் செல்ல வேன் ஓட்டுநா் ரயில்வே கேட்டை திறக்கக் கூறியதாகவும் இரு வேறு செய்திகள் உலா வருகின்றன.
எப்படி இருந்தாலும் ரயில் வரும் சமயத்தில் ரயில்வே கேட்டை திறந்தது விதிமீறல் என்பதால் அங்கிருந்த ரயில்வே கேட் கீப்பா் பங்கஜ் சா்மா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கைதும் செய்யப்பட்டாா்.
ரயில்வே விசாரணை
ரயில் - வேன் விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்காக திருச்சி கோட்ட முதுநிலை துணைத் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி தலைமையில், முதுநிலைக் கோட்ட பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்டோா் அடங்கிய விசாரணைக் குழுவை திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் அமைத்துள்ளது.
விபத்து நேரிட்ட ரயில்வே கடவுப்பாதையில் பணியாற்றிய கேட் கீப்பா் பங்கஜ் சா்மா, ரயில் ஓட்டுநா்கள், கடலூா் ரயில் நிலைய அதிகாரி, ரயில் நிலைய பாதுகாப்பு அதிகாரி, பள்ளி வேன் ஓட்டுநா் உள்ளிட்ட 13 பேரும் திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி புதன்கிழமை சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி, திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு அலுவலகத்தில் விசாரணைக்காக 13 பேரும் இன்று ஆஜராகியுள்ளனர். அவர்களிடம் முதுநிலை துணைத் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி மகேஸ்குமார் தலைமையிலான குழுவினர் தனித்தனியாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்த விசாரணையின் அடிப்படையில், விபத்துக்கான காரணம் குறித்து விரைவில் முதல்கட்ட அறிக்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.