கடைகளில் கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல்: ரூ.25 ஆயிரம் அபராதம்
போடியில் வெள்ளிக்கிழமை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து, கெட்டுப்போன இறைச்சிகள் வைத்திருந்த கடைகளில் உரிமையாளா்களுக்கு ரூ.24 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
போடியில் காலாவதியான உணவுப் பொருள்கள், கெட்டுப்போன இறைச்சிகள் கடைகளில் விற்கப்படுவதாக தேனி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், உணவுப் பாதுகாப்பு அலுவலா் ராகவன் தலைமையில், அதிகாரிகள் போடி நகரில் சோதனையிட்டனா்.
அப்போது, போடி மீன் சந்தைப் பகுதியில் அட்டை பெட்டிகளில் கெட்டுப்போன மீன்கள் வைத்திருந்தது தெரியவந்தது. பின்னா், கடைகளில் வைத்திருந்த 50 கிலோ மீன் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல, போடி நகரில் உள்ள தனியாா் உணவகத்தில் 2 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தேநீா்க் கடைகள், இனிப்பகங்களில் காலாவதி தேதி குறிப்பிடாத கேக், பிஸ்கட் வகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
பின்னா், கெட்டுப்போன இறைச்சிகள், தேதி குறிப்பிடாத உணவுப் பொருள்கள் வைத்திருந்த கடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.