"கடைசி பெஞ்ச் இல்லை..”- இனி பள்ளிகளில் 'ப' வடிவில் அமர வேண்டும்- கல்வித்துறை உத்தரவு... என்ன காரணம்?
பள்ளிகளில் இனி "கடைசி பெஞ்ச்" என்ற கருத்தே இல்லாததாகிவிடும். பள்ளிக் கல்வித்துறை வழங்கிய புதிய உத்தரவின் படி, இனி வகுப்பறைகளில் மாணவர்கள் ‘ப’ வடிவில் அமர்ந்து கல்வி பயில வேண்டிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
புதிய அமர்வு முறையின் முக்கிய நோக்கமே 'Last bench student' என்ற எண்ணத்தை விதைக்காமல் இருப்பதாகும்.
எல்லா மாணவர்களும் ஆசிரியரை நேரடியாக பார்க்கக்கூடிய வகையில் அமர்ந்தால், கல்வியில் தெளிவும் கவனமும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது.
அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளதாவது, ”வகுப்பறைகளில் மாணவர்கள் அனைவரும் சமமாகக் கருதப்பட வேண்டும் என்ற நோக்குடன் புதிய அமர்வு முறை பள்ளிகளில் அறிமுகப்படுத்தவுள்ளோம். இதன் மூலம் இதற்கு முன்பு இருந்த முதல், கடைசி என்ற பாகுபாடுகளை தவிர்க்க முடியும். மாணவர்கள் ஒருவருக்கொருவர் நேரடியாகப் பார்வையிடக்கூடிய வகையில், 'ப' வடிவத்தில் இருக்கைகள் அமைக்கப்படும்.
இந்த புதிய அமர்வு முறை, மாணவர்களின் கவனம் மற்றும் கற்றல் ஈடுபாட்டை மேம்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது, பள்ளிகளில் இந்த முறை பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படவுள்ளது. அதன் பயன்கள் மற்றும் சவால்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர், முழுமையாக எல்லா வகுப்பறைகளிலும் இந்த முறை பின்பற்ற வேண்டுமா என்பதைப் பற்றிய முடிவு எடுக்கப்படும்" என்று கூறியிருக்கிறார்.
மலையாளத்தில் வெளியான "ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்" திரைப்படத்தின் தாக்கம் கல்வித்துறை வரை எதிரொலித்துள்ளது. இத்திரைப்படத்தில் வகுப்பறைகளில் கடைசி வரிசையில் அமர்ந்த மாணவர்களின் நிலைமை குறித்து பேசப்பட்டிருக்கும். பள்ளி வகுப்பறைகளில் மாணவர்கள் வரிசை வரிசையாக அமரும் முறை மாற்றம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை வகுப்பறை அமர்வு முறையில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.