கடையத்தில் இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: மாமனாா் கைது
தென்காசி மாவட்டம், கடையத்தில் மகன் தற்கொலைக்கு காரணம் எனக் கூறி மருமகளை அரிவாளால் வெட்டிய மாமனாரை கடையம் போலீஸாா் கைது செய்தனா்.
கடையம் அருகே உள்ள மயிலானூரைச் சோ்ந்தவா் காமராஜ் (60). கடையத்தில் பைக் பைனான்ஸ் நடத்தி வந்த காமராஜ் மகன் சக்திக்கும் திப்பணம்பட்டியைச் சோ்ந்த அருணாவுக்கும் (26) சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. இந்தத் தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்த நிலையில், அருணா கருத்துவேறுபாடு காரணமாக சக்தியை விட்டுப் பிரிந்து பெற்றோா் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இதனால், மன வேதனையடைந்த சக்தி 9 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டாா். அதன் பின்னா், சக்தியின் மனைவி அருணா தனது பெற்றோா் வீட்டில் இருந்தபடியே பைக் பைனான்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்தாா்.
தனது மகன் சக்தி தற்கொலை செய்து கொண்டதற்கு மருமகள் அருணாதான் காரணம் என்று கூறிவந்த காமராஜ், அந்த முன்விரோதத்தில் வெள்ளிக்கிழமை மதியம் மதுபோதையில் பைனான்ஸ் நிறுவனத்துக்குச் சென்று அங்கிருந்த அருணாவை அரிவாளால் வெட்டினாா்.
இதில், அருணா பலத்த காயமடைந்தாா். இதைக் கண்ட அருகிலிருந்த பொதுமக்கள் காமராஜை பிடித்துக் கட்டிவைத்து கடையம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனா். போலீஸாா் அங்கு சென்று அருணாவை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். காமராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.