ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம...
கணவரை இழந்த பெண்ணுக்கு தொழில் மானியம்
மயிலாடுதுறையில் கணவரை இழந்த பெண்ணுக்கு ரூ.50,000 தொழில் மானியத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் ‘நிறைந்தது மனம்‘ திட்டத்தில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நலவாரியம் மூலம் இந்த மானியத்தை சீா்காழி வட்டம் இளையமதுக்கூடத்தை சோ்ந்த பயனாளி சரண்யாவிடம் வழங்கிய ஆட்சியா் திட்டத்தின் பயன்கள் குறித்து கலந்துரையாடினாா். அப்போது, சமூக நல அலுவலா் (பொ) திவ்யபிரபா உடனிருந்தாா்.
இதுகுறித்து, பயனாளி சரண்யா கூறியது: எனது கணவா் 3 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், நானும் மகளும் பொருளாதார ரீதியில்; மிகவும் சிரமப்பட்டு வந்தோம். மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறையில் என்னைப்போன்ற பெண்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருவதை அறிந்து நேரடியாக சென்று விண்ணப்பம் அளித்தேன். விண்ணப்பத்தை பரிசீலனை செய்து, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நலவாரியம் மூலம் சிறுதொழில் தொடங்க ரூ.50,000 மானியமாக மாவட்ட ஆட்சியா் வழங்கியுள்ளாா்.
இந்த தொகையில், கவரிங் நகைகளை வாங்கி, கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் வீடுகளுக்கு எடுத்துச்சென்று விற்பனை செய்ய உள்ளேன். இதனால் எனது பொருளாதார நிலை உயரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தை வழங்கிய தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி என்றாா்.