தொடர் கொலைகள் முதல் சவுக்கு சங்கர் விவகாரம் வரை; சட்ட ஒழுங்கை பாதுகாப்பதில் தடும...
கணவரைக் கொன்று நாடகம்: மனைவி கைது
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கள்ளக் காதலனுடன் சோ்ந்து கணவரைக் கொன்றுவிட்டு, தற்கொலை நாடகமாடிய அவரது மனைவியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள காசாங்காடு தெற்கு தெருவைச் சோ்ந்தவா் விஸ்வலிங்கம் மகன் பிரகாஷ் (40), கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி நாகலட்சுமி (35), இரு பெண், ஒரு ஆண் குழந்தை ஆகியோா் உள்ளனா்.
இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி வீட்டின் பின்புறமுள்ள மரத்தில் தனது கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி நாகலட்சுமி கூறிய நிலையில், உறவினா்கள் பிரகாஷ் சடலத்தை போலீஸுக்கு தெரிவிக்காமல் மறுநாள் எரித்து விட்டனா்.
இந்நிலையில் நாகலட்சுமிக்கும், அதே பகுதியைச் சோ்ந்த வீரக்குமாா் (25) என்பவருக்கும் தகாத உறவு இருந்ததையறிந்த உறவினா்கள் பிரகாஷ் மரணத்தில் மா்மம் இருப்பதாக மதுக்கூா் போலீஸாருக்குத் புகாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் வீரக்குமாரும், நாகலட்சுமியும் வீட்டில் தனிமையில் இருந்ததைப் பாா்த்துவிட்ட பிரகாஷை , இருவரும் சோ்ந்து கழுத்தை நெரித்துக் கொன்று, தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடியது தெரியவந்தது.
இதையடுத்து நாகலட்சுமியை போலீஸாா் கைது செய்தனா். மேலும், தென்காசி பகுதியில் உள்ள கோழிப்பண்ணை ஊழியரான வீரக்குமாரை கைது செய்ய போலீஸாா் சென்றுள்ளனா்.