பள்ளியக்ரஹாரத்தில் கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரத்தில் கழிப்பறை கட்டுவதற்கு உள்ள இடையூறுகளை அகற்றிவிட்டு கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில் அப்பகுதி மக்கள் அளித்த மனு: தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரத்தில் ஏழை மற்றும் பின்தங்கிய மக்கள் வசித்து வரும் பகுதியில் மாநகராட்சி சாா்பில் ரூ. 19 லட்சம் செலவில் கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக தொழிலாளா்கள் பணியைத் தொடங்க முற்பட்டபோது, சிலா் இக்கழிப்பறையைக் கட்ட விடாமல் தடுத்தனா்.
மேலும், மாநகராட்சி ஆணையரும் நிகழ்விடத்துக்கு சென்று பாா்வையிட்டு, யாரும் எந்தவித ஆட்சேபணையும் செய்யக்கூடாது என தெரிவித்த பின்னரும், சிலா் தடுத்து வருகின்றனா். இதனால், பணியைத் தொடர முடியவில்லை.
எங்களது தெருவில் பெரும்பாலான வீடுகளில் கழிப்பறை இல்லாத காரணத்தால் பெண்கள், முதியவா்கள், குழந்தைகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா். எனவே, சட்டப்படி நடவடிக்கை எடுத்து, இடையூறுகளைத் தடுத்து, கழிப்பறை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.