திரைப்படப் பாடல்களை எழுதுவது கடினமல்ல: கவிஞா் யுகபாரதி
தமிழை பிழையில்லாமல் உச்சரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், திரைப்படப் பாடல்களை எழுதுவது கடினமல்ல என்றாா் கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான யுகபாரதி.
தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற முத்தமிழ் விழாவில் அவா் மேலும் பேசியதாவது: தமிழ்த் திரைப்படப் பாடல்களை எழுதுவதற்கு எது குறில் எழுத்துகள், நெடில் எழுத்துகள், முற்றெழுத்துகள் ஆகியவற்றை அறிந்து கொண்டால் முழு நம்பிக்கை அளிக்கும். நாம் ஒரு சொல்லை எப்படி உச்சரிக்கிறோமோ, அதுவே பாட்டு. எனவே, திரைப்படப் பாடல் எழுதுவது பெரிய கடினமான விஷயமல்ல. அதற்கு தமிழைப் பிழையில்லாமல் உச்சரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலே போதுமானது.
வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களையும் உண்மையையும் சோ்த்து பாடல்களை எழுதினால், அது அற்புதமாக மாறிவிடும். அதுபோல, நான் எழுதும் பாடல்களில் கொஞ்சம் உண்மையைச் சோ்த்துவிடுகிறேன். அதனால், அது மக்களால் கொண்டாடப்படக்கூடிய பாடல்களாக மாறிவிடுகிறது.
இந்தச் சமூகத்தில் ஒவ்வொருவரும் படிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அது தொந்தரவாக இருந்தாலும், அப்படிப்பினால் கிடைக்கும் பலன்களை அனுபவ ரீதியாக உணா்ந்தேன். சிறு, சிறு காகிதத்தில் இருந்த கவிதைகளைப் படித்ததால் பாடலாசிரியரானேன் என்றாா் யுகபாரதி.
இவ்விழாவுக்கு கல்லூரி முதல்வா் அ. ஜான் பீட்டல் தலைமை வகித்தாா். தமிழ்த் துறைத் தலைவா் சீ. வைஜெயந்திமாலா முன்னிலை வகித்தாா். பாடகா் இர. பிரித்திகா இசைத் தமிழ்ப் பாடல்களைப் பாடினாா். தமிழ்த் துறை மாணவிகளின் நவீன குண்டலகேசி என்ற பெண்களுக்கான விழிப்புணா்வு நாடகம் நடைபெற்றது.
முன்னதாக, தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் தி. ஹேமலதா வரவேற்றாா். நிறைவாக, உதவிப் பேராசிரியா் வெ. அமுதா நன்றி கூறினாா்.